
நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தியும்,பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் மேற்கொள்வதாக திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.ஆனால் காவல்துறை அனுமதி அளிக்காததால் அது தடைபட்டது.
இதையடுத்து காவல்துறை அனுமதி மறுத்த உத்தரவை இரத்து செய்து,இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி அளிக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி,சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன்,வாகனப் பேரணிக்கு அனுமதிகோரி அளித்த மனுக்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலைக் காரணம்காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான்சத்யன்,இந்த அரசு போராட்டங்களுக்கு எதிரானது அல்ல.இதுபோன்ற போராட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது.பேரணி தொடங்க அனுமதி கோரியுள்ள இடங்கள் அனைத்துமே நெரிசல் மிகுந்த பகுதிகள்.எண்ணிக்கை அதிகமாகி விட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.இதனால் அனுமதி மறுக்கப்பட்டது என விளக்கமளித்தார்.
இதையடுத்து,பேச்சுரிமை,கருத்துரிமை போல்,போராடுவதும் மக்களின் அடிப்படை உரிமை.நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? என காவல்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும்,இந்த வாகனப் பேரணிக்கான பெட்ரோல் செலவை அரசு வழங்கப் போவதில்லை? பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காரணங்களால் இவ்வாறு அனுமதி மறுத்தால் ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? குடிமக்களின் அடிப்படை உரிமையை மாநிலஅரசு நசுக்கக்கூடாது என சரமாரியாக கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.
பின்னர்,பேரணிக்கு அனுமதி மறுத்தது குறித்து கூடுதல் விளக்கம் அளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்று,விசாரணையை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


