மரியவில்சன் பேசுவது மாண்பல்ல – திருமுருகன்காந்தி கோபம்

சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று கடையநல்லூர் ராசேந்திரன் (திமுக) பேசும்போது,குமரி மாவட்டத்தின் மாப்பிள்ளை என்கிற முறையில் நிதியமைச்சர் மரியவில்சனுக்கு என் வாழ்த்துகள்.அவர் பட்ஜெட்டை படித்தபோது ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருந்தது.தமிழில் சில சொற்கள் இலக்கணப் பிழையாக இருந்தது.அமைச்சர் ராஜ்மோகன் அவருக்குத் தமிழ் கற்றுத்தர வேண்டும் என்று பேசினார்.

இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் மரியவில்சன்,முதலில் உருவகேலி செய்தார்கள் இப்போது மொழியை வைத்து கேலி செய்கிறார்கள்.எனக்கு,கிறிஸ்துவம் ஒருமொழியைக் கற்றுத் தந்துள்ளது.அது அன்பு மொழி.தமிழ் படித்தாலும் அது எனக்கு தெரியாது20,30 வருஷமாக நான் கல்வித் துறையில் இருக்கிறேன். எனக்கு ஆங்கிலம் சரளமாக பேச முடியும்.தமிழ் இப்போது கற்றுக்கொண்டு இருக்கிறேன். சட்டமன்றத்தில் தன்னை தொடர்ந்து சில நாட்களாக கேலி செய்து பேசுகிறார்கள். நான் இப்படித்தான் பேசுவேன். உங்களால் ஏற்றுக்கெள்ள முடிந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், நான் மாற்றிக்கொள்ள முடியாது என்று கோபத்துடன் கூறினார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி இதுகுறித்து கூறியிருப்பதாவது….

ஆங்கிலத்தில் தமிழைக் கலந்து பேசுகிறாரா? அல்லது தமிழை ஆங்கிலத்தோடு கலக்கிறாரா?இருமொழிகளையும் கலந்து பேசும் போக்கிற்கு எதிராக ‘தனித்தமிழ்’ இயக்கத்தவர்கள் நூறாண்டுகளாக செயல்பட்டுள்ளனர்.

நிதியமைச்சரின் ஆங்கிலக் கலப்பு மொழிநடையை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள இயலாதென்பது அவரது இயலாமையைக் காட்டுகிறது.இப்படியாக ஆங்கிலக் கலப்போடு பேசுவதை Unique -தனித்துவமானது என்கிறார். மொழிக் கலப்போடு பேசுவது’தனித்துவமானதல்ல..அது மொழியைக் கொச்சைப்படுத்துவதாக ஆகும்.ஓரிரு முறை எதார்த்த நிலைகளில் பேசுவது வேறு.தமிழ் மொழிதான் தமிழ்நாட்டரசின் மொழி எனும் நிலையில்,அமைச்சர் பொறுப்பேற்பவர்,தனது மொழி நடையைத் தகவமைத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய,ஒருமொழி நடையை தனித்துவமானது என்பது நகைப்பிற்குரியது.
அவரது கலப்பு மொழியை சுட்டிக்காட்டினால்,அதை கவலையுடனும்,சுயவிமர்சனத்துடனும் ஏற்பது அவசியம். அவர் மக்கள் மன்றத்தில் பேசுகிறார்,ஆகவே,மக்களின் தாய்மொழியில் உரை நிகழ்த்தும் கடமை அவருக்குண்டு. அவரை அமைச்சராக்கிய மக்களின் மொழியை பேசவராது,இயலாதென்பது மாண்புக்குரியதல்ல.
முதலமைச்சர்,அமைச்சர்கள் என அனைவரும் ஆங்கிலம்,பிறமொழி கலக்காத தமிழில் பேசவேண்டும்.அரசு நிர்வாகத்தில் தமிழே ஆட்சி மொழியாக,தொடர்பு மொழியாக அமையட்டும்.
சட்டசபையில் தனித்தமிழை பேசத்தெரியாதவர்களுக்கும்,பேச இயலாதவர்களுக்கும் தனியே பயிற்சி முகாமை தவெக அரசு உருவாக்கட்டும்.உலகளவில் அவரவர் தேசத்தில் அவரவர் தாய்மொழியிலேயே அரசு அலுவலகங்களில் உரையாற்றுகிறார்கள் என்பதை மறக்கக்கூடாது.
அமைச்சர்கள் தொடர்ந்து இருமொழிக் கலப்பாக பேசுவார்களெனில் மக்கள் எதிர்ப்பை சந்திக்க வேண்டி வரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response