
ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் தீரன் சின்னமலை சிலைக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அதிமுகவினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில்,வேலுமணி மீது அதிருப்தியில் இருந்த தற்போதைய கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் செ.ம.வேலுசாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர். அப்போது ஒருதரப்பினர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என முழக்கமிட அதற்குப் போட்டியாக எஸ்பி வேலுமணி வாழ்க என மற்றொரு குழுவினர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின்,திண்டுக்கல் மாவட்டம் பழநி தொகுதி அதிமுக சமஉ ரவிமனோகரனின் சமஉ அலுவலகத் திறப்புவிழாவில் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
25 நாட்களுக்கு முன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எங்களுக்கெல்லாம் பொறுப்புகளை அறிவித்தார்.அப்போதே தெளிவாக ஒரு கடிதத்தில் நான்,நத்தம் விஸ்வநாதன் உள்பட 10 பேர் எங்களுக்கு பதவிகள் வேண்டாமென்று அறிவித்தோம்.கட்சிக்காக உழைத்தவர்கள்,கட்சியின் வெற்றிக்காக உழைத்தவர்கள்,எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவதற்கும்,பொதுச்செயலாளராக வருவதற்கும் சி.வி.சண்முகம் பல வழக்குகளை சந்தித்தவர்.2 வாரம் மட்டுமே நாங்கள் பிரிந்திருந்தோம்.அனைவருக்கும் பழைய பதவிகளைப் போடுவதாகச் சொன்னபிறகே நாங்கள் அமைதியானோம்.
ஆனால்,இதுவரை அதுபோல் செய்யவில்லை.அதனால் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை.பொதுக்குழுவைக் கூட்டி தோல்வி குறித்து ஆராயவேண்டும் என்று கூறியிருந்தோம்.ஆனால், இதுவரை எதுவுமே செய்யவில்லை.பொதுக்குழு உறுப்பினர்கள் 200க்கும் மேற்பட்டவர்களை நீக்கிவிட்டார்.தினமும் நீக்கிக்கொண்டே இருக்கிறார்.இதெல்லாம் கூடாது.
கண்டிப்பாக கட்சியைப் பலப்படுத்த வேண்டும்.பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்.சசிகலா, தினகரன் உள்ளிட்டவரையும் சேர்க்கவேண்டும்.எங்களுக்கு பழைய பொறுப்புகளை வழங்கி அனைவரையும் ஒன்று சேர்க்கவேண்டும்.அனைவரிடமும் கருத்து கேட்கவேண்டும்.
அதிமுக மூன்றாமிடத்துக்குச் சென்றுவிட்டது.இன்றும் அதிமுகவில்தான் இருக்கிறோம்.அதிமுகவில் உறுப்பினராக இருந்து எங்கள் வேலையைப் பார்க்கிறோம்.திண்டுக்கல் மாவட்டத்தையும்,கட்சியையும் வளர்த்த நத்தம்விசுவநாதனின் நிலையைப் பாருங்கள்.கட்சியின் உறுப்பினராக மட்டுமே உள்ளார்.அனைவரையும் அனுசரித்தால் மட்டுமே கட்சி ஜெயிக்கமுடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் நத்தம்விசுவநாதன் அளித்த பேட்டியில்….
இந்தியாவிலேயே 3 ஆவது பெரிய அரசியல் கட்சியாக இருந்த அதிமுக, எடப்பாடி பொறுப்பேற்ற பிறகு நாளுக்குநாள் தேய்ந்து கொண்டே வருகிறது.அவரிடம் கட்சி வரும்போது 134 சட்டமன்ற உறுப்பினர்கள்,50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்.இப்போதைய நிலை என்ன?கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை என்பார்களே,அதுபோலத்தான் இவருடைய தலைமையில் அதிமுகவின் நிலைமை மாறியுள்ளது.இவர் பொறுப்பேற்றது அதிமுகவின் வளர்ச்சியா அல்லது தளர்ச்சியா என்பதை தலைமை சிந்தித்துப் பார்க்கவேண்டும். தேர்தல் வரக்கூடும்.அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்,பொறுத்திருந்து பார்ப்போம்
இவ்வாறு அவர் கூறினார்.


