
திருச்சி சட்டக் கல்லூரி 3 ஆவது பட்டமளிப்பு விழா திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவில்,தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணைவேந்தரும்,தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சருமான நிர்மல்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பேட்டியில்….
தவெக நீட் தேர்வை எதிர்ப்பதில் உறுதியாக உள்ளது.மாணவர் போராட்டங்களில் தவெகவினர் பங்கேற்றாலும் கட்சிக்கொடி,பேனர் அல்லது எந்த அரசியல் அடையாளங்களையும் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர்,பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் கருத்துக்களைக் கேட்டு வருகிறார்.அதேபோல் சட்டவல்லுநர்களிடமும் ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நல்லமுடிவு எடுக்கப்படும்.
மேகதாது அணை விவகாரத்தை பேச்சுவார்த்தை மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்வது சரியாக இருக்கும்.தமிழ்நாடு முதல்வரின் கர்நாடக பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் அலுவலகமே வெளியிடும்.
பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியலில் இருந்து விலகுவது குறித்துச் சொல்ல வேண்டுமானால் மக்களுக்காக நீண்டகாலம் போராடிய மூத்த தலைவர்.அவரது தனிப்பட்ட முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
நீண்டகாலமாகச் சிறைகளில் உள்ள இஸ்லாமிய கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒன்றிய அரசின் ஒத்துழைப்புடன் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதுகுறித்த சட்ட நடைமுறைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தவெக கட்சி நிறத்தில் சென்னை மாநகர பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளதே என்று கேட்கிறீர்கள்,தவெக கட்சி நிறத்தில் பஸ்களை இயக்கும் எந்தத் திட்டமும் இல்லை. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை செயல்படுத்துவதிலேயே அரசு கவனம் செலுத்தி வருகிறது.
திரிஷாவுக்கு துணைமுதல்வர் பதவி வழங்கப் போகிறார்கள் என ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளாரே எனக்கேட்கிறீர்கள்,ஊரில் சீட்டாட்ட கிளப் ஒன்று இருக்கும்.அங்கு வரும் செல்வந்தர்கள்,சீட்டு விளையாட்டுக்கு இடையில் ‘டீ’ அருந்துவார்கள்.அப்போது,பொழுதுபோக்கிற்காக இதுபோன்று ஏதாவது பேசிவிட்டுச் செல்வார்கள்.அதுபோன்றுதான் ஆர்.பி.உதயகுமார் பேசி வருகிறார்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


