
கேரளாவில் மகள் நைனிகாவுடன் வாழ்ந்து வருகிறார், விஜய். நைனிகா படிக்கும் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் எமி ஜாக்சன். கிட்டத்தட்ட பாட்ஷா மாதிரி செல்லும் படத்தில் விஜய் எப்போது, நான் அவனில்லை என்று ஆக்ரோஷ முகம் காட்டுவார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
எமி ஜாக்சன் ஒரு சின்ன பிரச்சனைக்காக காவல்நிலையம் செல்ல, விஜய்யின் நிஜப்பெயர் ஜோசப் குருவில்லா இல்லை என்பது தெரிய வருகிறது. அப்படியானால் விஜய் யார்? அவரது பின்னணி என்ன?
எமி ஜாக்சனைப் போல் நமக்கும் ஆர்வம். ஜெட் வேகத்தில் எழும்ப வேண்டிய படம் இந்த இடத்தில் அரதபழசான கதையாலும், திரைக்கதையாலும் பட்டம் மாதிரி அல்லாடுகிறது.
விஜய்க்கு சாதுவாகவும், ஆக்ரோஷமாகவும் பல முகங்கள் காட்ட வேண்டிய கதாபாத்திரம். வித்தியாசத்தை காட்டுகிறேன் என்று ஜோசப் குருவிலாவாக அவர் காட்டும் மேனரிசங்கள் படு செயற்கை.
போதாததற்கு எமி ஜாக்சனின் இரண்டும் கெட்டான் மலையாளம். இந்த இடங்களில் நம்மை காப்பாற்றுவது துறுதுறுவென வரும் நைனிகாவும் அவரது நடிப்பும். இந்தப் படத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம்.
விஜய்யின் மனைவியாக வரும் சமந்தாவின் நடிப்பு தரம். ஆனால், இவர்கள் அனைவரையும்விட மொட்ட ராஜேந்திரன் வரவேற்புப் பெறுகிறார். இடைவேளையில் விஜய்யும் ராஜேந்திரனும் பேசிக் கொள்ளும் காட்சி கைதட்டல் வாங்குகிறது.
பாடல்களைப் படமாக்க மெனக்கெட்டிருக்கிறார்கள். இரண்டு காதல்பாடல்கள் படத்தின் வேகத்துக்கு போடப்பட்ட முட்டுக்கட்டை. மகனை கொன்ற விஜய்யை பழிவாங்கும் வில்லன் கதாபாத்திரம் இயக்குனர் மகேந்திரனுக்கு. ஒரேவிதமாக பார்த்து பழகிய வில்லன்களுக்கு இவர் வித்தியாசமாக தெரிகிறார்.
வில்லனின் மகன் ஒரு பெண்ணை கற்பழிப்பதும், அவனை கதாநாயகன் அடித்துக் கொல்வதும், பதிலுக்கு வில்லன் நாயகனின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதும்… ஸ்ஸ்ஸ்… சொல்லும் போதே போரடிக்கிறது. இந்த புராதன கதைதான் அட்லிக்கு கிடைத்ததா?
ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும் சேர்ந்து இந்த பழைய கதையை மெருகேற்ற பாடுபட்டிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் விஜய்யின் வேகம் தெரிகிறது ஆனால், கதைக்கு சம்பந்தமில்லாமல், பிச்சையெடுக்க வைக்கும் குழந்தைகள் விஷயத்தில் விஜய் போடும் சண்டை ஒட்டாமலே உள்ளது.
எவ்வளவுதான் பழைய கதையாக இருந்தாலும், அதனை சுவையாகச் சொல்லியிருந்தால் மனதைத் தொட்டிருக்கும்.


