திட்டமிட்டு அறுபதாயிரம் கோடி வருவாய் இழப்பு செய்த ஜெ அரசு, ஊடகங்கள் இதைப் பேச மறுப்பது ஏன்? – மே 17 இயக்கம் கேள்வி

ஏப்ரல் 14 அன்று சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற அம்பேத்கார் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அதிமுக – திமுக செய்த மின்சார ஊழல் குறித்தான ஆவணப்படம் வெளியிடப்பட்டது.  அரங்க குணசேகரன் அவர்கள் வெளியிட பொழிலன் உள்ளிட்டவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

அம்பேத்கார் கொண்டுவந்த சட்டத்தின் மூலமே நாம் அனைவரும் இன்றுவரை மின்சாரத்தின் பயனை அனுபவிக்கிறோம். பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியதாக இருந்த மின்சாரத்தினை மானிய விலையிலும், இலவசமாகவும் அனைத்து மக்களுக்கும் வழங்கும் ‘மின்சார சட்டத்தினை” அறிமுகப்படுத்தியவர் அம்பேத்கார்.

இதன் மூலம் பெரிய நிறுவனங்களுக்குஇலாபத்தில் மின்சாரத்தினை விற்று, அந்த வருவாயில் ஏழை எளிய மக்களுக்கு மின்சாரம் மானிய விலையில் கொடுக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தினை காங்கிரஸும், பாஜகவும் கிழித்துக் குப்பைத்தொட்டியில் போட்டார்கள். இதன் படி தனியார் நிறுவனங்கள் சொந்தமாக மின்சார உற்பத்தி செய்து கொள்கிறது. அரசு சொந்தமாக மின்சாரத்தினை உற்பத்தி செய்யக் கூடாது, மாறாக தனியாரிடம் மின்சாரத்தினை வாங்க வேண்டுமென்று சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அதிக விலையில் தனியாரிடம் மின்சாரத்தினை வாங்கும் ஒப்பந்தங்களை அதிமுக அரசும், திமுக அரசும் போட்டி போட்டுக்கொண்டு செய்தன. இதன் காரணமாக 95,000 கோடி ஊழல் மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டது. இந்தக் கடன் சுமை மக்கள் மீது சுமத்தப்படுகிறது.

இதன் படி நம்மிடம் இருந்து வருடம் தோறும் 15,000 கோடி ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கும் அதிமுக-திமுக அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு உலகறிந்த உண்மை.

இந்த உண்மைகளை வெளிக்கொணரும் ஆவணப்படத்தினை தேர்தல் கமிசனும், காவல்துறையும் சேர்ந்து முடக்க முயன்றது. இந்த அடக்குமூறையை மீறி தோழர்கள் பல இடங்களில் வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதிமுக-திமுகவிற்கு துணை நிற்கும் தேர்தல் கமிசன், அதிகாரவர்க்கம், காவல்துறை ஆகியவற்றினை அம்பலப்படுத்தும் கடமை இயக்கங்களிடம் மட்டுமே காணமுடியும்.

அதிமுக அரசு 60,000 கோடிக்கும் அதிகமாக வருவாய் இழப்பினை திட்டமிட்டு செய்திருக்கிறது. இதைப் பற்றி எந்த தொலைக்காட்சி ஊடகமும் பேச மறுக்கிறது. மக்கள் இயக்கங்களாகிய நாமே இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

என்று மே பதினேழு இயக்கம் கூறியுள்ளது.

 

Leave a Response