200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு உயிரைவிடும் தமிழ்மக்கள் – இந்தக் கொடுமை உலகில் எங்கேனும் உண்டா?

கோடை வெயிலின் உக்கிரம் மக்களின் உயிரை குடிக்கும் அளவிற்கு அதிகரித்துவிட்டது. தேர்தல் காலம் என்பதால் இளம் பிஞ்சுகள் முதல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் முதியவர்கள் வரை என தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்க்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. ஆளுக்கு 200 ரூபாய், 500 ரூபாய், பிரியாணி பொட்டலம், ஆண்கள் என்றால் கூடவே குவார்ட்டர் என்று ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் செல்லும் கும்பல், அவர்களை வெயிலில் வாட்டி எடுத்து கடைசியில் உயிரையே எடுத்து விடுகின்றனர் என்பதுதான் சோகம்.

வெயில் காலத்தில் எந்த வித வசதியும் செய்யாமல் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் அரசியல் கட்சியினர், விவிஐபிக்களுக்கு மட்டும் வசதியான மேடையை அமைத்து விடுகின்றனர். தொண்டர்கள்தான் வெயிலில் காய்ந்து கருகவேண்டியுள்ளது. தொண்டர்களாவது கருகலாம், அது அவர்கள் விரும்பி ஏற்கும் கஷ்டம். ஆனால், ஏழைகளை காசுக்கும் சாப்பாட்டு பொட்டலத்துக்கும் விலைக்கு வாங்கி கூட்டிச் சென்று கொல்வது தான் மகா பாவம். இந்த பாவத்தை சிலர் தவிர மற்ற எல்லா பெரிய கட்சிகளும் செய்கின்றன. இதில் எந்த ஒரு கட்சியையும் மட்டும் குறிப்பிட்டு குறை சொல்லிவிட முடியாது.

விருத்தாசலத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரத்துக்காக பல மணி நேரம் வெட்ட வெளியில் காத்திருந்த பெண்கள் வெயில் தாங்காமல் வெளியேற முயன்றபோது முடியாமல் 17 பேர் மயக்கமடைந்தனர். இதில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்து விட்டனர். சிகிச்சை பெற்று வரும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பதுதான் சோகம்.

சென்னையில் நடைபெற்ற கூட்டம் மாலை நேரத்தில் நடைபெற்றது என்பதால் சிக்கல் இல்லை. ஆனால் நேற்று பிற்பகல் 3 மணிக்கு விருத்தாசலத்தில் நடந்த கூட்டத்திற்கு 11 மணியில் இருந்தே கூட்டத்தை கூட்டி வந்து பட்டியில் அடைத்தது போல அடைத்து விட்டனர் என்பதுதான் கொடுமை.

இயற்கை உபாதைகளை வெளியேற்றக் கூட வழியில்லாமல் அடங்கிக் கிடந்த பெண்கள்தான் ஒரு கட்டத்தில் வெயிலின் உக்கிரம் தாங்காமல் வெளியேற முயற்சி செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஏராளமான பெண்கள் மயங்கி சாய்ந்தனர். ஆனாலும் அலட்சியத்துடனேயே அவர்களை கையாண்ட அதிமுகவினர் எந்த வித முதலுதவி சிகிச்சையும் உடனடியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leave a Response