ஓட்டுக் கேட்க வரும் அதிமுகவினரை ஊருக்குள் விடமாட்டோம் – குமரி மாவட்ட பெண்கள் சூளுரை

குமரி மாவட்டம் இரணியல் அருகே நுள்ளிவிளை மற்றும் கட்டிமாங்கோடு ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடைகளினால் காரங்காடு, ஆலன்விளை, பேயன்குழி, நுள்ளிவிளை, பரசேரி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.  குறிப்பாக இரவு நேரங்களில் பேயன்குழி, குருந்தன்கோடு ஆற்றுப்பாலப்பகுதிகளில் பெண்கள் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது.  இதனால் இந்த இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அப்புறப்படுத்த வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பலகட்ட போராட்டம் நடத்தினர்.

தொடர் போராட்டத்தின் எதிரொலியாக கடந்த அக்டோபர் 15ம் தேதி 2 கடைகளையும் 30 நாட்களுக்குள் அகற்றிவிடுவோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் இதுவரையில் அகற்றப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள், டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணியினர் மற்றும் மாவட்ட மக்கள் அதிகார இயக்கத்தினர் ஒன்று திரண்டு நுள்ளிவிளை மற்றும் கட்டிமாங்கோடு ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் முன்பு நேற்று காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பேயன்குழி – காரங்காடு சாலை ஓரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையையும் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

டாஸ்மாக் மேலாளர் செல்வமணி, பத்மநாபபுரம் சப்கலெக்டர் ஸ்ரேயா பி. சிங், மாவட்ட எஸ்.பி தர்மராஜன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் 2 கடைகளும் தற்காலிகமாக 3 தினங்களுக்கு மூடப்படும். அடுத்த கட்டமாக அரசின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
இதனை போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 2 கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும், அதுவரை போராடுவோம் எனக்கூறினர். இதனால் போராட்டக்குழுவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அனைவரையும் கைது செய்ய எஸ்.பி உத்தரவிட்டார். இதையடுத்து மறியல் பேராட்டத்தில் ஈடுபட்ட பங்குத்தந்தையர் எடிசன், டென்சிங் மற்றும் மக்கள் அதிகார இயக்கத்தினர், டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணியினர் என 125 பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக அடித்து இழுத்து வேனில் ஏற்றி,  திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அதிமுக தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அப்பாவிகளை கொல்வதற்கான அறிவிப்பு, எனவே குளச்சல் தொகுதியில் ஓட்டு கேட்டு வரும் அதிமுகவினரை ஊருக்குள் நுழைய விடமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

Leave a Response