
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களைப் பெறவில்லை.இதைத்தொடர்ந்து, காங்கிரசு, 2 கம்யூனிஸ்ட்கள்,விசிக ஆதரவுடன் பெரும்பான்மையைப் பெற்று இன்று பதவியேற்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே,அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 47 சட்டமன்ற உறுப்பினர்களில் யாரும் தவெகவுக்கு தாவிவிடக்கூடாது என்று கடந்த 5 நாட்களாக புதுச்சேரியில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்திருந்தார்.
இந்தநிலையில் தவெகவுடன் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடந்தது.இதற்கான ஏற்பாடுகளை விஜய்யின் நெருங்கிய நண்பர் விஷ்ணு ரெட்டி, முன்னாள் அமைச்சர் வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் மூலம் செய்து வந்தார்.ஆனால்,இந்தத் திட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கவில்லை.
இந்தநிலையில்தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் கூட்டணி அமைச்சரவை அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.இதற்கு திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கோரப்பட்டது.ஆனால், இந்தத் திட்டத்திற்கு திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒத்துக்கொள்ளவில்லை.
இதனால் எடப்பாடி மற்றும் அதிமுக மூத்ததலைவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.பின்னர் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது,திமுக வெளியில் இருந்து ஆதரவு என பேச்சுவார்த்தை நடந்தது.அப்போது, எடப்பாடி நான்தான் முதலமைச்சர் என்று கூறினார்.இதற்கு கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து மறுத்து வந்தனர்.
இதையடுத்து, திருமாவளவனை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும்,அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும்.திமுக வெளியில் இருந்து ஆதரிக்கும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.ஆனால், எடப்பாடி முதலமைச்சர் பதவியிலேயே குறியாக இருந்தார்.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையிலான 32 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். எடப்பாடி பழனிச்சாமி மட்டும் மறுத்து விட்டார். இதனால் நேற்று பிற்பகல்வரை எடப்பாடி பழனிச்சாமி சம்மதிப்பார் என்று திருமாவளவன் காத்திருந்தார்.
திருமாவளவனை முதலமைச்சராக்க வேலுமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் முழு ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து நேற்று காலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அந்தக்கூட்டத்தில் சண்முகத்திற்கும், எடப்பாடி பழனிவ்சாமிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமை வலுவான கூட்டணி அமைக்காததால் தான்,3 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது.நீங்கள் கட்சி நலன் பற்றி யோசிப்பது இல்லை,உங்களுக்கு முதலமைச்சர் பதவி வேண்டும், கட்சித் தலைவர்கள் பதவி வேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். அதனால்தான், தற்போதும் கூட்டணி ஆட்சி அமைவது தடைபட்டுவிட்டது.மேலும்,போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு,கட்சியிடம் இருந்து தேர்தல் செலவுக்கு போதியபணம் வழங்கவில்லை என பல முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி மீது கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, எடப்பாடி பழனிச்சாமிக்கும் சி.வி.சண்முகத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டணி அமைக்கும் தகுதியே எடப்பாடிக்கு இல்லை என சி.வி.சண்முகம் நேருக்கு நேர் குற்றச்சாட்டியதாகச் சொல்லப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்ததும் நேற்று மதியம் 3.30 மணிக்கு சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 32 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தனியாக ஆலோசனை நடத்தினர்.
இது தெரிந்ததும் எடப்பாடி பழனிச்சாமி,புதிதாகப் பதவி ஏற்க உள்ளவர்களுக்கு வாழ்த்துகள் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இதையடுத்து,அதுவரை காத்திருந்த திருமாவளவன், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனை அழைத்து ஆதரவுக் கடிதத்தைக் கொடுத்து விட்டார்.
கூட்டணி அமைச்சரவை வருவதைத் தடுக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்ட தகவல் தெரிந்ததும், வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சமஉக்கள், எடப்பாடியே கட்சியை அழித்துவிடுவார். முதலில் விஜய் முதலமைச்சராக ஆதரவு தெரிவித்து, கூட்டணி அமைச்சரவைக்கு எடப்பாடி பழனிச்சாமி மறுத்து விட்டார்.பின்னர் திருமாவளவன் தலைமையில் கூட்டணி அமைச்சரவைக்கும் எடப்பாடி பழனிச்சாமி மறுத்து விட்டார். இப்படி அதிகாரத்துக்கு வருவதைத் தடுத்தால் எப்படி கட்சி வளரும் என்று கூறிய சமஉக்கள், எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவில் புதியஅணியை உருவாக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.மேலும், இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை மாநிலம் முழுவதும் திரட்ட சி.வி.சண்முகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதிமுக மீண்டும் 2 ஆக உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆதரவாளர்களான தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.சி.கருப்பண்ணன், ஜெயசுதா உள்ளிட்டோரை அனுப்பி சமாதானம் செய்ய முயன்றார்.ஆனால்,சி.வி.சண்முகம் சமாதானம் அடையவில்லை.எப்படியாவது, அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி வரவிடாமல் தடுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அதோடு, பொதுச்செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை விலக வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமி விரைவில் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகவிருப்பதாகவும், விரைவில் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும் கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அதன்பின், விஜய் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் இணையவும் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.


