அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்தார் டிடிவி.தினகரன்

ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் அணிசேர்க்கை தீவிரமாக நடந்துவருகிறது.

அதிமுக பாஜக கூட்டணி இன்னும் இறுதிவடிவம் பெறவில்லை.அந்தக் கூட்டணியில் இன்னும் எந்தெந்தக் கட்சிகள் சேரவிருக்கின்றன என்று தெரியவில்லை.

இப்போதைக்கு அக்கூட்டணியில் அதிமுக பாஜக தவிர அன்புமணியின் பாமக,ஜிகே.வாசனின் தமாகா,ஏ.சி.சண்முகத்தின் கட்சி, ஜான்பாண்டியன் கட்சி, பாரிவேந்தர் கட்சி ஆகிய கட்சிகள் மட்டுமே இருக்கின்றன.

இந்நிலையில், வரும் 23 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகம் அருகே தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடக்கிறது.

இதில் கூட்டணியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூட்டணியில் இடம்பெறுபவர்கள் யார்? யார்? என்பது அப்போது தெரியும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று மதுராந்தகத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகையில், அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

அதில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் படமும் இடம்பெற்றுள்ளது.இதனால், இன்னமும் கூட்டணி முடிவை அறிவிக்காத டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் கூறுவதாவது, டிடிவி.தின்கரன் எங்கள் கூட்டணியில் இணைந்துவிட்டார்.அது பிரதமர் வரும்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறார்கள்.

Leave a Response