11 ஆண்டுகள் கழித்து கிறிஸ்துமஸ் விழாவில் மோடி – அதிர்ச்சிப் பின்னணி

இவ்வாண்டு கிறிஸ்துமஸ் நாளன்று, பிரதமர் மோடி, தில்லியில் உள்ள கதீட்ரல் சர்ச் ஆஃப் ரிடெம்ப்ஷனில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை பிரார்த்தனை மற்றும் கீதங்கள் சேவையில் கலந்துகொண்டார்.அங்கு பிரதமருக்காக ஒரு சிறப்பு பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

மோடி பிரதமராகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் கலந்து கொண்டது பேசுபொருளாக மாறியது.

அதேநாளில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் உள்ளிட்ட வடமாநிலப்பகுதிகளில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தி, கிறித்துவ மக்கள் மீது இந்துத்துவ அமைப்புகள் கோரத்தாக்குதல் நடத்தின. கிறித்துவ மக்கள் மீது நடத்தப்பட்ட இக்கொடுந்தாக்குதல் உலகரங்கில் இந்திய நாட்டின் நன்மதிப்பையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்நிலையில், புதுக்கோட்டை பெரியார்நகரில் உள்ள காங்கிரசுக் கட்சி மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது….

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றியது மிகப்பெரிய பாதக செயல். மகாத்மா காந்தி படுகொலைக்கு ஈடான படுகொலை 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றியது.

2015 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தோல்வியின் நினைவுச் சின்னமாக மகாத்மா காந்தி தேசிய உறுதி அளிப்புத் திட்டம் இருக்கும் என்று தெரிவித்து இந்தத் திட்டத்தை இரத்து செய்யவேண்டாம், இருந்துவிட்டுப் போகட்டும் என்று கூறினார். 10 ஆண்டு கழித்து இந்தத் திட்டத்தை படுகொலை செய்துள்ளனர்.

திமுக கூட்டணியில் தேர்தல் உடன்பாடு தொகுதிப் பங்கீடுக்காக 5 பேர் குழு காங்கிரசு தலைமை நியமித்துள்ளது. இந்த 5 பேர் குழு, திமுக தலைவரைச் சந்தித்திருக்கிறார்கள். அவர், நான் ஒரு கமிட்டி அமைப்பேன், அப்போது 2 குழுக்களும் பேசிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். 2 குழுக்களும் பேசி அவர்கள் தலைவர்களுக்கு அறிக்கை அனுப்பிய பின்னர் இரு தலைவர்களும் பேசி முடிவெடுப்பார்கள்.

ஒரு பக்கம் கிறிஸ்தவ மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். ஒரு பக்கம் 11 ஆண்டு கழித்து கிறிஸ்துமஸ் பண்டிகையில் பிரதமர் மோடி கலந்துகொள்வார். இது என்ன வேடிக்கை? நல்லவேளை மறைந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவரது காலத்தில் நடித்து நடிகர்திலகம் என்று பெயர் எடுத்தார். இந்தக்காலத்தில் நடிகர்திலகம் என்றால் அது பிரதமர் மோடி தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

ப.சிதம்பரத்தின் இக்கூற்றின் மூலம் கிறிஸ்துவ மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை மறைக்க அல்லது மடைமாற்றவே பிரதமர் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டார் என்று தெரியவருகிறது.இதனால் வடமாநிலங்களில் வெகுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response