தனிக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ் – பாஜக கூட்டணியா? விஜய் கூட்டணியா?

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக உரிமை மீட்புக்குழு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், “இதுவரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த அமைப்பு இனி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகமாகச் செயல்படும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதோடு,டிசம்பர் 15 ஆம் தேதி மீண்டும் மாவட்டச் செயலாளர்களைக் கூட்டி முக்கிய முடிவெடுக்கப்படும் என்று அந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் கூறியிருந்தார்.

அதனால்,அவரை தில்லி அழைத்துச் சந்தித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.அவரை சமாதானப்படுத்தி தேசிய சனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டியதாகச் சொல்லப்பட்டது.அதோடு,அந்தப் பயணத்தின் போது ஓபிஎஸ், தனிக் கட்சியையும் பதிவு செய்யச் சென்றதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில்,டிசம்பர் 15 ஆம் தேதி (இன்று) நடக்கவிருந்த கூட்டத்தைத் தள்ளி வைத்திருந்தார் ஓபிஎஸ்.

இந்நிலையில்,அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையின் கடிதத்தாளில் ‘உரிமை மீட்புக் குழு’ என்பதற்குப் பதிலாக ‘உரிமை மீட்புக் கழகம்’ என மாற்றப்பட்டுள்ளது. முகவரியும் பசுமை வழிச்சாலைக்குப் பதிலாக, நந்தனம் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் ஓபிஎஸ் சத்தமின்றி புதுக் கட்சியைத் தொடங்கிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட அந்த அறிக்கையில்….

மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் இந்தக் கட்சி, அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடுமா? அல்லது விஜய் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமா? என்கிற கேள்விக்கான விடை கிடைத்துவிடும் என்று சொல்கிறார்கள்.

இதனால்,அரசியல் அரங்கிலும் அதிமுக வட்டாரங்களிலும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Leave a Response