
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய்யின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒன்றிய குற்றப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரித்து வருகிறது.
முன்னதாக, அக்டோபர் 17 ஆம் தேதி கரூர் சென்ற சிபிஐ குழுவிடம், கரூர் நகர காவல்துறையினர் மற்றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவினர்,அவ்வழக்கு தொடர்பான அனைத்து
ஆவணங்களையும் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, சிபிஐ குழுவைச் சேர்ந்த ஆய்வாளர் மனோகரன், கரூர் குற்றவியல் நீதிமன்றம் 2 இல் நீதிபதி
சார்லஸ் ஆல்பர்ட் முன்னிலையில் முதல் தகவல் அறிக்கையை அக்டோபர் 22 ஆம் தேதி தாக்கல் செய்தார்.
அதில்,விஜய் கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார் மற்றும் தவெகவினர் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு, விசாரணையைத் தொடர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் குற்றவியல் நீதிமன்றம் 1 இல் சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் நகலைக் கேட்டு தவெக வழக்கறிஞர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் அவர்களிடம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறை விசாரித்தால் விசாரணை சரியாக நடக்காது ஒன்றிய புலனாய்வுத் துறை விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும் என்று சொல்லிக் கொண்டிருந்தர்கள்.இப்போது, ஒன்றிய புலனாய்வுத் துறையின் முதல் தகவல் அறிக்கையும் விஜய் கட்சியினர் மீதே குற்றம் சுமத்தியிருக்கிறது, இதனால் அப்படிச் சொன்னவர்கள் திடுக்கிட்டுப் போயிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த முதல் தகவல் அறிக்கையை வைத்துக்கொண்டு அரசியல் ரிதியாக ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களால் விஜய் மிரட்டப்படுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.


