
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டன.பல்வேறு கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி ஒரு பக்கமும், அதிமுக-பாஜக தலைமையிலான ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ மறுபுறமும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன.
அதேபோல்,நாம் தமிழர் கட்சி தனித்துக் களம் காண்கிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் முதல் முறையாகத் தேர்தலைச் சந்திப்பதற்குத் தயாராகி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தற்போது மக்களவைத் தேர்தல் நடந்தால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கக்கூடும் என இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் ஆகியவை இணைந்து ‘மூட் ஆப் தி நேஷன்’ என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தின.அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
அதன்படி, கடந்த மக்களவைத் தேர்தலில் 47 விழுக்காடு பெற்றிருந்த திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 52 விழுக்காடாக உயர்ந்திருந்த நிலையில் தற்போது 4 விழுக்காடு குறைந்துள்ளது.இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடத்தினாலும் 36 தொகுதிகள் (48%) வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிமுக – பாஜக கூட்டணியைப் பொறுத்தவரை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்டபோது மொத்தமாக 41% வாக்குகளை பெற்றிருந்தன.
பிப்ரவரியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இக்கட்சிகளின் வாக்கு 21% இருந்த நிலையில் தற்போது அதிமுக – பாஜக கூட்டணி வைத்துள்ளதால் இப்போது தேர்தல் நடந்தால் 37% இருக்கும் என ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.
வாக்கு விழுக்காடு அதிகரித்தாலும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெறக்கூடும் எனவும், இதனால் இக்கட்சிகள் இன்னும் மக்களை முழுமையாகச் சென்றடைய பலகட்ட முயற்சிகளை எடுக்கவேண்டும் எனவும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 12 விழுக்காடாக இருந்த பிறகட்சிகளின் வாக்குவங்கி, பிப்ரவரி மாதத்தில் 7% ஆக சரிந்ததாகவும், தற்போது தவெக களமிறங்கிய நிலையில், நாம் தமிழர் உள்ளிட்ட பிற கட்சிகளின் வாக்கு விழுக்காடு 15 விழுக்காடாக உயர்ந்திருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, திமுக கூட்டணிக்கு வாக்குகள் சற்று சரிந்திருந்தாலும் விஜய்யின் வருகை 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு உதவிகரமாக இருக்கும் என்றும் இதனால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
விஜய் கட்சியின் வருகையால அதிமுக வாக்குகள் சரியும் எனவும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி உயரும் எனவும் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது.


