அண்ணாமலை மீது நயினார் புகார் – தநா பாஜக பரபரப்பு

தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் உடைந்தது. தமிழ்நாட்டிலேயே மோசமான ஆட்சி என்பது 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை நடந்த ஜெயலலிதா ஆட்சிதான் என்று அண்ணாமலை கூறினார். அதோடு அண்ணாவைப் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்தார்.இதனால், அதிமுக கூட்டணி உடைந்தது.

இரு கட்சிகளும் மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவின. இதற்கு அண்ணாமலைதான் காரணம் என்று மேலிடம் கடும் கோபமடைந்தது. இதனால் அண்ணாமலையின் மாநிலத் தலைவர் பதவியைப் பறித்து, நயினாரிடம் வழங்கியது. அவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நெருக்கம் காட்டினார். இதனால் மீண்டும் கூட்டணி ஏற்பட்டுள்ளது.

கூட்டணி அமைந்ததிலிருந்து,அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதை எடப்பாடி பழனிச்சாமி மறுத்து வருகிறார். அமித்ஷாவின் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று கூறி வருகிறார்.

இந்நிலையில்,கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அண்ணாமலை, நேற்று திடீரென செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது…

அமைச்சரவையில் பங்கு என்று அமித்ஷா அறிவித்துள்ளார். அவரது கருத்துதான் என்னுடைய கருத்து. மற்ற கட்சியினரின் கருத்தை ஏற்க முடியாது. அதில் சந்தேகம் இருந்தால் அவர்கள் அமித்ஷாவிடம்தான் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுத்தார்.

இந்தப் பேட்டியைப் பார்த்ததும் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
கூட்டணி குறித்துப்பேச அமித்ஷாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி அண்ணாமலை பேட்டி கொடுப்பார்? அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? அண்ணாமலை மாநிலத்தலைவராக இருந்தபோது கூட்டணி குறித்து நயினார் நெல்லையில் பேட்டி அளித்தபோது, அவர் கூறியது அவரது சொந்தக் கருத்து. கூட்டணி குறித்து அவர் பேசக்கூடாது. நான் மட்டுமே பேசுவேன் என்றார். தற்போது எந்தப்பதவியிலும் இல்லாமல் அண்ணாமலை மட்டும் எப்படி பேட்டி அளிக்கலாம்? அதுவும் கூட்டணியை உடைக்கும் அளவுக்கு அவர் எப்படிப் பேசலாம் என்று மேலிடத்தில் அவரது ஆதரவாளர்கள் புகார் செய்துள்ளனர்.

இதன்மூலம் நயினார் மற்றும் அண்ணாமலை இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இரு தலைவர்களின் ஆதரவாளர்களுக்கிடையேயும் மோதல் வலுத்து வருவதால் தமிழ்நாடு பாஜக வட்டாரம் பரபரப்பாக இருக்கிறது.

Leave a Response