நயினார் அண்ணாமலை மோதல் முற்றுகிறது – தநா பாஜக பரபரப்பு

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றிவிட்டு, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நியமிக்கப்படும்போது 16 மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மேலும் 16 மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதேபோல மாநில நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.

தற்போது மாநில நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்த நயினார் நாகேந்திரன், அனைத்துத் தலைவர்களிடமும் அவர்களது ஆதரவாளர்களின் பட்டியலைக் கேட்டு வாங்கியுள்ளார்.குறிப்பாக அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரிடம் அவர்களது ஆதரவாளர்களின் பட்டியலைக் கேட்டு வாங்கியுள்ளார். அவர்கள் அனைவருமே பெரிய பட்டியலைக் கொடுத்துள்ளனர். இந்தப் பட்டியலைப் பார்த்தவுடன் நயினார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அவர்களைத் தவிர மற்ற குட்டித் தலைவர்களிடமும் பட்டியலை வாங்கியுள்ளார். இந்தப் பட்டியலை வைத்து பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்துடன் சேர்ந்து பட்டியலை இறுதி செய்த நயினார் மாநில நிர்வாகிகள் 20 பேரை நியமனம் செய்ய 60 பேர் கொண்ட பட்டியலுடன் டெல்லி விரைந்துள்ளார். அங்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார். அவர்களிடம் பட்டியலைக் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கோவையில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வேலுமணி, அண்ணாமலை ஆகியோருக்கு மட்டும் சோபா போடப்பட்டிருந்தது. மாநில தலைவர் நயினாருக்கு சாதாரண இருக்கை போடப்பட்டது. இதனால் நயினார் அதிர்ச்சி அடைந்தார். மாநில தலைவர் பதவியில் இருந்தாலும், தன்னை அண்ணாமலை செயல்பட விடாமல் தடுப்பதாகக் குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கூடுதலாக அதிர்ச்சியில் உள்ளார்.

அதனால்,இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அண்ணாமலையின் பெயரை கட்சியின் எந்த நிகழ்ச்சியிலும் போடக்கூடாது என்று நயினார் கூறியதாக தகவல்கள் வெளியாகியது.

இதற்கு சமூகவலைதளங்களில் அண்ணாமலையின் பெயரைப் போடக்கூடாது என்று சொன்ன சார் யார்? என்று கேட்டு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதனால், அண்ணாமலையின் ஆதரவாளர்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டு தனது ஆதரவாளர்களை அதிகமாக நியமிக்க நயினார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.அதேசமயம், அண்ணாமலை டெல்லி தலைமை மூலம் தனது ஆதரவாளர்களுக்கு அதிகப்பொறுப்புகளை வாங்க தீவிரமாக முயன்று வருகிறார்.

இவர்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு முன்னாள் தலைவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள தங்களது ஆதரவு தலைவர்கள் மூலம் பதவிகளைப் பெற அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்த வார இறுதியில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாநில பாஜகவில் மோதல் வெடிப்பது உறுதி என்று அக்கட்சியினரே சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Response