மது குடித்தே அழிவதுதான் தமிழினத்தின் தலையெழுத்தா?

தமிழகத்தில் மது விற்பனை மூலம்  அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இப்படி மது விற்பனையில் அதிக லாபம் ஈட்டும் அரசு, அதனால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன செய்தது? இந்த கேள்விதான் தமிழக மக்களிடம் சுற்றிச் சுற்றி வருகிறது. ஏனெனில், தமிழகத்தில் மதுக் கொள்கையும்  இல்லை. மறுவாழ்வுக்கான விதிமுறைகளும் இன்னும் வகுக்கப்படவில்லை என்ற உண்மை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம்  வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 6825 டாஸ்மாக் கடைகளும், 4435 மதுபானக்கூடங்களும் இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 1748  டாஸ்மாக் கடைகளும், 1384 மதுபானக்கூடங்களும் செயல்படுகின்றன. மாவட்ட வாரியாக பார்க்கும் போது, திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக  378 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதற்கு அடுத்தபடியாக, மதுரை மாவட்டத்தில் 318 டாஸ்மாக் கடைகளும், 274  மதுபானக்கூடங்களும் இயங்கி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 302 டாஸ்மாக் கடைகளும், கோவை மாவட்டத்தில் 299 டாஸ்மாக்  கடைகளும் செயல்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் 290 டாஸ்மாக் கடைகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2‌88 டாஸ்மாக் கடைகளும்  இயங்கி வருகின்றன. குறைந்த பட்சமாக தர்மபுரியில் 99 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன.

இப்படி தமிழகத்தில் அதிகரித்து வரும் குடிப்பழக்கம், மக்களின் உடல் மற்றும் சமூக நலத்தை பாதிப்பதாக கூறி பல அமைப்புகள் பூரண மதுவிலக்கு  கோரி அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றன. மதுக்கடையை மூடக் கோரி தினமும் மாநிலத்தின் ஏதாவது ஒரு மூலையில் பெண்களும்  போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், போராடுபவர்களை ஒடுக்கவே தமிழக அரசு கவனம் செலுத்துகிறது. உள்துறை, மதுவிலக்கு  அமலாக்கத்துறை மற்றும் டாஸ்மாக் ஆகிய துறைகளிடம் கேட்ட கேள்விகளில் மதுக்கொள்கை இல்லை என்றே பதில் அளித்துள்ளனர். அது என்ன மதுக்கொள்கை? மதுவை எப்படி தயாரிக்க வேண்டும், அதன் தரம், அதை கொள்முதல் செய்வது எப்படி, விற்பனை செய்யும் முறை,  வாடிக்கையாளர் பாதுகாப்பு, மது அடிமை சீர்திருத்தம் ஆகியவை அடங்கியதுதான் மதுக்கொள்கை.

இதன் அடிப்படையிலேயே மகாராஷ்டிர, கர்நாடக உள்ளிட்ட மாநில அரசுகள் மதுக்கொள்கையை வெளியிட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் இந்த  கொள்கை செயல்படுத்ரதப்படவே இல்லை. எனவே வயது வித்தியாசம் இன்றி குடிப்பழக்கம் அனைவரிடமும் பரவி வருவதாக மதுபான விற்பனை  குறித்த ஆய்வு மேற்கொண்டுவரும் ஆய்வாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அத்துடன் தனிப்பட்ட மனிதரை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த  குடும்பத்தையும் சமூகத்தையுமே அழிக்கும் சக்தி மதுவுக்கு இருக்கிறது என்கின்றனர். அதே போல் மதுவால் பாதிக்கப்பட்டவர்களை போதையிலிருந்து  மீட்கும் திட்டங்கள் தமிழகத்தில் எப்படி செயல்படுகின்றன என்று பார்த்தால் ஏமாற்றமே கிடைக்கிறது என வருத்தப்படுகின்றனர்.

2003 ஆம் ஆண்டிலிருந்து மதுபானத்தை டாஸ்மாக் மூலம் அரசு விற்பனை செய்துவருகிறது. இதில் ஆண்டுதோறும் 23 ஆயிரம் கோடி ரூபாய்  வருமானம் ஈட்டிவருகிறது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர் மத்தியிலும், சமூகத்திலும் மது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து இதுவரை  அரசால் எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. தமிழகத்தில் தினமும் ஒன்றரை கோடி பேர் மது குடிக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம். ஆனால், மதுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மொத்தம் 26 மறுவாழ்வு மையங்கள்தான் செயல்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை  போதுமானதல்ல. அதேபோல் மதுவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மாநில அரசு செலவிடும் தொகையும் சொற்பமே. பாதிக்கப்பட்டவர்களின்  வாழ்கையை மீட்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாயை செலவு செய்கிறது. சிகிச்சைக்கு மட்டும் செலவு செய்தால்  போதாது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மத்திய, மாநில அரசுகள் இறங்க வேண்டும்.

மாநில வருமானத்தின் மையமாக மது விற்பனையை கொண்டிருக்கும் தமிழக அரசு, அதில் வரும் லாபத்தில் கொஞ்சமாவது மதுவினால்  பாதிக்கப்பட்டவர்களை மீட்க செலவிடக் கூடாதா என்று சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர். ஏனெனில் மதுபானத்தால் பாதிக்கப்பட்டவர்களை  அதிலிருந்து மீட்டெடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மது போதை ஒரு வளரும் நோய் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். மது  போதையிலிருந்து மீள்வதற்கான பயிற்சியில் நேரடியாக கலந்து கொண்டால் மட்டுமே அதிலிருந்து மீளமுடியும். அப்படி மறுவாழ்வு மையங்களில்  சேரும் ஒவ்வொருவருக்கும் மதுபோதை அளவு கணக்கிடப்படுகிறது.

தனிப்பட்ட முறையில் மனநல மருத்துவரால் ஆலோசனை வழங்கப்படுகிறது. மது, அதை அருந்துபவர்களின் நரம்பு செல்களை நேரடியாக பாதித்து  அவர்களின் சிந்தனையை மட்டுப்படுத்துகிறது என்று சொல்லும் மருத்துவர்கள், மன நலத்தையும் க‌டுமையாக பாதிக்கும் என்று எச்சரிக்கை  செய்கிறார்கள். மதுவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கான விதிகளை இந்த அரசு உருவாக்கவே இல்லை. அதனால் மறுவாழ்வு  மையங்கள் எதுவும் புத்துணர்வு பெறவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு பின் அமையப் போகும் புதிய அரசு சந்திக்கும் பிரச்னைகளில் இதுவே  பிரதானமாக இருக்கும் என்கிறார்கள்.

Leave a Response