அழிந்து போன சமக்கிருத மொழித் திணிப்பை, தமிழர்கள் ஏற்கவே மாட்டோம் – கு.இராமகிருட்டிணன் திட்டவட்டம்

மத்திய அரசு பள்ளிக்கூடங்களில் சமக்கிருத மொழியை கட்டாயப் பாடமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பிப்ரவரி 25 அன்று கண்டன ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் நடந்தது.

ஈரோடு காந்திஜி ரோடு முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகக் கட்டிடம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குணசேகரன், செயலாளர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்தியஅரசு பள்ளிக்கூடங்களில் சமக்கிருதத்தை கட்டாயப்பாடமாக்கக்கூடாது. மத்திய அரசு பணிகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீட்டின்படி பணிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் கோஷங்களாக எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் மாணவர் அணி செயலாளர் திலீபன் சக்கரவர்த்தி, மாணவியர் அணி செயலாளர் கு.தாணுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டக்குழுவினர் திடீரென்று முழக்கங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர், அஞ்சலகம் பகுதியில் போராட்டக்குழுவினரை தடுத்து நிறுத்தினார்கள்.

முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி மறுத்தனர். ஆனால் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடுவதாக போராட்டக்குழுவினர் கூறியதால், போலீசார் அவர்களை கைது செய்தனர். அதில் 8 பெண்கள் உள்பட 43 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னதாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்தே சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சி.பி.எஸ்.சி. போன்ற மத்திய அரசு பள்ளிக்கூடங்களில் இந்தியை கட்டாயமாக்கியது.

ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று சமஸ்கிருத பெயரில் விழாவாக மாற்றியது. கட்டாய சமஸ்கிருத வாரவிழா கொண்டாடச்செய்தது என்று பல திணிப்புகளுடன் தற்போது அழிந்துபோன சமஸ்கிருத மொழியை கட்டாயமாக திணிக்கும் வேலையில் பா.ஜனதா அரசு ஈடுபட்டு உள்ளது. இதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம். தொடர்ந்து போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response