மொழி சமத்துவம் மற்றும் உரிமைக்கான பரப்பியக்கம் என்ற அமைப்பின் சார்பில் பிப்ரவரி 22 அன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உலக தாய்மொழிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் நீத்த தியாகிகளுக்கும், பல்வேறு மொழிகளை சேர்ந்த மொழியுரிமை தியாகிகளுக்கும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மொழி சமத்துவம் மற்றும் உரிமைக்கான பரப்பியக்கம் அமைப்பின் அனைத்திந்திய ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன், சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் வீ.அரசு மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.
தமிழ் உள்பட 22 மொழிகளை மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிப்பதோடு 40-க்கும் மேற்பட்ட வட்டார மொழிகளுக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு தனது எல்லா தகவல் தொடர்புகளிலும் இணைய தளங்களிலும் மாநில மொழிகளை பயன்படுத்த வேண்டும் என்றும், தாய்மொழிக் கல்விக்கான உரிமையை மத்திய அரசுபள்ளிகளிலும் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.