தமிழர்கள் மீது பொய்வழக்குப் போட்ட ஆந்திர காவல்துறைக்குச் சவுக்கடி- வழக்கறிஞர் ஆவேசம்

செம்மரக் கடத்தல் வழக்கில் தகுந்த ஆதாரம் இல்லாததால், தமிழகத்தைச் சேர்ந்த 351 பேரை திருப்பதி நீதிமன்றம் புதன்கிழமை விடுவித்தது. இவர்களில் ஆந்திரச் சிறைகளில் இருந்த 287 பேரும் புதன்கிழமையே விடுதலையாகினர். இதன்மூலம் ஏற்கெனவே ஜாமீனில் இருந்த 64 பேரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

 பொய் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினருக்கு இந்தத் தீர்ப்பு ஒரு சவுக்கடி என தமிழர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கிராந்தி சைதன்யா நேற்று தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டிலேயே முதன்முறையாக இரண்டு வனத் துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட வழக்கில் 400-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். திருப்பதிக்கு வரும் தமிழர்களை போலீஸார் பொய் வழக்கில் சிக்க வைப்பது வாடிக்கையாகி விட்டது.

தமிழர்கள் என்கிற ஒரே காரணத்தால் இவர்கள் பல இடங்களில் கைது செய்யப்பட்டனர். எந்த குற்றமும் செய்யாத தமிழகத்தைச் சேர்ந்த 288 பேர் 26 மாதங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்தனர். இவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ள நிலையில், இதற்கு ஆந்திர அரசும், போலீஸாரும் என்ன பதில் கூறப்போகிறார்கள்?

கடந்த 26 மாதங்களில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் பட்ட வேதனைக்கும், அவமானத்திற்கும் அளவே இல்லை. இனியாவது போலீஸார் அப்பாவி மக்களை கைது செய்வதை விட்டு, உண்மையான செம்மரக் கடத்தல்காரர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு சைதன்யா கூறினார்.

கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட தமிழர்கள் தாங்கள் அனுபவித்த சித்ரவதைகளை செய்தியாளர்களிடம் கண்ணீருடன் கூறினர். அதன்விவரம்:

பாண்டியன், கள்ளக்குறிச்சி:

நான் விழுப்புரம் மாவட்டம், கள்ளகுறிச்சியைச் சேர்ந்தவன்.

விவசாய கூலித் தொழிலாளியான நான் பிழைப்பு தேடி திருப்பதிக்கு வந்தபோது, போலீஸார் பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் என் மனைவி, பிள்ளைகள் மிகவும் கஷ்டப்பட்டனர். நான் 2 ஆண்டுகளாக சிறையில் நரக வேதனை அனுபவித்தேன்.தற்போது விடுதலை ஆகி உள்ளது மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது.

குப்புசாமி, திருப்பத்தூர்:

கட்டிட தொழிலாளியான நான், வேலைக்காக திருப்பதிக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன். திருப்பதி பஸ் நிலையத்தில் இறங்கும்போது திடீரென போலீஸார் என்னை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர்தான் என் மீது கொலை வழக்கு பதிவு செய்தது தெரிய வந்தது. இந்த நிலை எதிர்க்குக் கூட ஏற்படக் கூடாது.

கண்ணன், தி.மலை மாவட்டம்:

கடந்த 26 மாதங்களாக எப்போது விடுதலை ஆவேன் என எதிர்ப்பார்த்திருந்தேன். தற்போது அனைவரும் விடுதலை ஆகி இருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. கட்டிட தொழிலாளியான நான் சுவாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு வந்தேன். என்னை பஸ் நிலையத்தில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எனக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவரையும் சுமார் 2 ஆண்டுகள் கழித்து சந்திக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

செல்வம் மனைவி குப்பு, தி.மலை மாவட்டம்:

என் கணவர் செல்வம் கூலி தொழிலாளி. நாங்கள் இரு வரும் கூலி வேலை செய்து எங்கள் இரு குழந்தைகளை காப்பாற்றி வருகிறோம். இந்நிலையில், காளஹஸ்திக்கு சென்ற என் கணவரை போலீஸார் அங்குள்ள பஸ் நிலையத்திலேயே கைது செய்தனர். மேலும் பொய் வழக்கு போட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டி வந்தது. இதனால் நான் பல சமயம் செத்துவிடலாம் என நினைத்தேன். அவர் விடுதலை யானது மகிழ்ச்சி அளிக்கிறது.

Leave a Response