2016 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் அனுமதி மீறி இரவு 10 மணிக்கு மேல் பேசியதாக வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு விசாரணைக்காக, திண்டுக்கல் ஜே.எம்-1 நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று நேர்நின்றார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது….
இந்தியா நெருக்கடியான காலக்கட்டத்தில் உள்ளது. நாட்டில் ஜனநாயகம் நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாக ஒன்றிய மோடி அரசு செயல்படுகிறது.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நாங்கள் கூட்டணியில் இருந்தபோது, காஷ்மீர் பிரச்னையை தேசிய கொள்கை அட்டவணையில் சேர்க்கவில்லை.இதேபோல பொது சிவில் சட்டத்தையும் சேர்க்கவில்லை. அந்த அட்டவணையில் நானும், முரசொலி மாறனும் கையெழுத்திட்டிருந்தோம்.
ஆனால், தற்போது காஷ்மீரை துண்டு, துண்டாக ஆக்கிவிட்டார்கள். `ஒரே நாடு; ஒரே கொடி; ஒரே தேர்தல்’ என்று கூறுகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரத்தை நோக்கியே இந்தியாவைக் கொண்டு செல்ல முயல்கிறார். இந்த முயற்சியில் அவர் படுதோல்வி அடைவார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்ற நோக்கில்தான், ஒன்றிய அரசு நமக்கு தர வேண்டிய நிதியை ஒவ்வொரு கட்டத்திலும் கொடுக்காமல் திட்டமிட்டு தாமதம் செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.