
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்து வரும் நளினியின் தந்தை சங்கரநாரயணன் நேற்று காலமானார்.
ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளரான சங்கரநாராயணன் திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அம்பலவானபுரத்தில் வசித்து வந்தார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பரோல் வழங்கப்பட்டது.
இன்று காலை 8 மணியளவில் வேலூர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த நளினி, சென்னைக்கு 11 மணியளவில் வந்து சேர்ந்தார். தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட நளினி பல முறை பரோல் கேட்டு விண்ணப்பித்தும், இன்றுதான் முதல் முறையாக பரோலில் வெளியே வந்துள்ளார். அப்போதும் தந்தை இறந்த துக்கத்தோடுதான் வெளிக்காற்றை சுவாசிக்க நேர்ந்துள்ளது.
நளினிக்கு ஆறுதல் கூறவும், அவரது தந்தைக்கு அஞ்சலி செலுத்தவும் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் உள்ளிட்ட பல தலைவர்களும் வந்திருந்தனர்
இறுதிச் சடங்குக்காக வந்த இடத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது…..
ராஜீவ் காந்தி கறுப்பா சிவப்பா என்றே தெரியாது. ராஜீவ் காந்தி கொலைக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. விடுதலையை தவிர வேறு எதை நாங்கள் எதிர்பார்க்க முடியும்?.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எங்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். சிறை வாழ்க்கை மிகவும் கொடுமையானது. நிறைய துன்பங்களை அனுபவித்து விட்டோம்.
ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுவிப்பார் என்று நம்புகிறோம் என நளினி கூறியுள்ளார்.
25 வருடங்களாக சிறையில் இருக்கும் பெண் நானாகத்தான் இருப்பேன்.
25 ஆண்டுகளுக்கு பின்னர் பார்க்கும் சென்னை நிறைய மாற்றங்களை கண்டுள்ளது. இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணிந்து செல்வதை பார்க்கும் போது சற்று வியப்பாக இருந்தது என்றார்.


