விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி பேசியதாவது….
விழுப்புரத்தில் வரும் 29 ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவில் பங்கேற்குமாறு பாமக நிறுவனர் ராமதாசுக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்படும். விழாவுக்காக அச்சிடப்படும் அழைப்பிதழில் பாமக தலைவர் அன்புமணி பெயரும் இடம்பெறும். மேலும் 21 சமூக நீதிப் போராளிகளின் குடும்பத்தினரும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.
இப்போது நடக்கும் அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் 2026 ஆம் ஆண்டு வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளாகவே இருக்கின்றன.இந்நிலையில் திமுக தலைவருடன் பாமக தலைவர் இராமதாசு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலும் பங்கேற்பார் என்று சொல்லப்படுகிறது.
ஒரு பக்கம் திமுக கூட்டணியை உடைக்கும் முயற்சியை பல்வேறு தரப்பினரும் செய்து வருகிறார்கள்.அதற்கு எதிர்வினையாக திமுக கூட்டணியில் பாமகவை இணைக்க திமுக முயல்கிறது என்கிற கருத்துக்கு வலுச்சேர்க்கும் விதமாகவே அமைச்சர் பொன்முடியின் அறிவிப்பு இருக்கிறதென அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பாமகவினரின் பதில் என்ன? முதலமைச்சரோடு பாமக நிறுவனர் மேடையேறுவாரா? என்கிற கேள்விகளுக்கான விடை ஒவ்வொன்றாக வெளிவரும் நேரத்தில் இந்த யூகங்கள் உண்மையாகுமா? பொய்யாகுமா? என்பது தெரியவரும் என்றும் சொல்கிறார்கள்.