விஜய் எதற்காகக் கட்சி தொடங்குகிறார்? – ஈவிகேஎஸ் கேள்வி

ஈரோடு காங்கிரசுக் கட்சி அலுவலகத்தில் அக்டோபர் 3 அன்று நடைபெற்ற மகளிரணி நிர்வாகிகள்
கூட்டத்தில் பங்கேற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதுவிலக்கு, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது….

மதுவிலக்கு ஒரு மாநிலத்தில் மட்டும் செய்துவிட முடியாது.முழுமையான மது விலக்கு இந்தியாவில் இருந்தது இல்லை.மதுகடைகளை அதிகமாக மூடினால் கள்ளச்சாராயம் காய்ச்சப்படும்.சாராயம் குடித்துப் பழகியவர்கள் 80 விழுக்காடு பேர் அடிமையாக உள்ள நிலையில் சாராயம் கொடுக்கவில்லை என்றால் மனம் மற்றும் உடல்நிலை கெட்டுப் போய்விடும்.கடுமையான பிரச்சாரம் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி முயற்சி செய்ய வேண்டும்.மது விலக்கு என்று சொல்லும் குஜராத், பீகார் மாநிலங்களில் சாராயம் ஆறு போல ஓடிக்கொண்டு இருக்கிறது.மது விலக்கு செய்வதற்கு முதலில் மக்கள் திருந்த வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக வெற்றி பெற முடியாது. காங்கிரசு தலைமையிலான நல்ல ஆட்சி அமையும் சூழல் அமைந்துள்ளது.

அதிமுக ஓட்டு வங்கி விஞ்ஞான ரீதியாக இபிஎஸ் 10 விழுக்காடு சரிந்ததுள்ளது என்று சொல்கிறார்.ஆனால் 30 விழுக்காடு வாக்கு வங்கி அதிமுகவில் இல்லை.அதிமுக தொண்டர்கள் கட்டுகோப்பாக இருந்தாலும் அதிமுக பாஜகவுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பு காரணமாக வாக்கு வங்கி சரிந்து கொண்டே வருகிறது.

நடிகர் விஜய்யை என் மகனாகப் பார்க்கிறேன்.அவருக்குச் சொல்வதென்றால், இப்போது எல்லோருடைய வீட்டுப் பிள்ளையாக நடிகர் விஜய் உள்ள நிலையில் சின்ன வட்டத்தை போட்டுக் கொண்டு அதில் இருப்பேன் என்று சொன்னால் யார் அதை ஏற்றுக்கொள்ளவார்கள்? நடிகர் விஜய் முதலில் எதற்காகக் கட்சி ஆரம்பிக்கிறார்? காங்கிரசுப் பேரியக்கம் நாட்டு மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவும் உலக வல்லரசு நாடாக இந்தியா வலிமை பெற வேண்டும் என்ற கொள்கையில் தொடங்கப்பட்டது. அதே வழியில் தமிழ் மொழி வாழவும் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெற வேண்டும், இந்தித் திணிப்பு கூடாது என்பதற்காகத் தான் திராவிடர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

ஒவ்வொரு கட்சியும் தொடங்குவதற்கு மூலக்கரு உள்ளது. ஆனால் இதெல்லாம் விஜய்க்கு புரியவில்லையோ? நடிகர் விஜய் கொடியை அறிவித்த நிலையில் கொடியில் சொல்ல வருவது என்ன? இரண்டு யானைக்கு என்ன விளக்கம் என்று சொல்லவில்லை. கொள்கைகள் அறிவிக்காமல் சொல்லாமல் எப்படி மாநாடு நடத்தப்படுகிறது? பதவி மீது ஏதாவது ஆசை இருந்தால் வெளிப்படையாகச் சொல்லிவிட்டு செல்ல வேண்டியது தானே?

நீட் தேர்வை எதிர்க்கக் கூடியவர், பெண் சுதந்திரம் என்று சொல்லக்கூடிய நடிகர் விஜய் காங்கிரசுக் கட்சியில் இணைந்து விட வேண்டும் தானே? நடிகர் விஜய் சொல்லும் கொள்கைகள் காங்கிரசிலும் திமுகவிலும் இருக்கும் நிலையில் எது பிடித்தததோ? அதில் இணைந்து விட வேண்டியதானே? எதற்காக தனி ராஜ்யம்?

கமல்ஹாசன்,டி.ராஜேந்தர், கருணாஸ் ஆகிய எல்லோரும் கட்சி ஆரம்பித்து வீட்டுக்குப் போய்விட்டார்கள். அதனால் நடிகர் விஜய் கட்சி ஆரம்பிப்பது தேவையற்ற ஒன்று. எனக்கு அவருடைய நடிப்பை விட டான்ஸ் பிடிக்கும்.

நடிகர் விஜய்யை மக்கள் தங்கள் பொழுதுபோக்குக்கான ஒரு முகமாகத்தான் பார்க்கிறார்கள்.அவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஆளுநர் வரலாறு தெரியாமல் நாள்தோறும் பேசி வருகிறார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மத்திய அரசு தான். உதயநிதி துணை முதல்வர் விவகாரத்தை பொறுத்தவரை இந்திய முழுவதும் குடும்ப அரசியல் உள்ளது. திறமை, உள்ள போது அவருக்கு அங்கீகாரம் அளிப்பதில் தவறில்லை. அனுபவம் என்பது மாதம், நாள் கணக்கில் வருவது இல்லை. ஒரு விசயத்தை எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்கிறார்களோ அது தான் அரசியலில் தேவை. இந்திராகாந்தி பிரதமராக வரும்போது எல்லாம் விமர்சனம் எழுந்தது. ஆகையால் வாய்ப்பு வரும்போது திறமையாக செயல்படக்கூடியவர்கள் யார் வந்தாலும் வரவேற்க வேண்டுமே தவிர அவர்களைக் கொச்சைப்படுத்தக் கூடாது.

இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

அவருடைய இந்தப் பேட்டிக்குப் பிறகு பலரும் விஜய் இப்போது கட்சி தொடங்குவது எதற்காக? என்கிற கேள்வியை எழுப்பிவருகிறார்கள்.

கட்சி மாநாட்டில் இதற்கு விடை சொல்லப்படும் என அக்கட்சியினர் பதில் கூறி வருகின்றனர்.

Leave a Response