திருப்பதி கோயில் லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.
இதற்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மேலும் திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும்,சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் அளித்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்தது.
அதில்,
திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசியது ஏன்?.
சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர், முடிவு வருவதற்கு முன்பே பொதுவெளியில் பேசியது ஏன்?
சர்ச்சைக்குரிய நெய்தான் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?.
பொது வெளியில் பேசுவதற்கு முன்பு என்ன கலப்படம் என்பது உறுதிசெய்திருக்க வேண்டும்.அரசியல் அமைப்பு சட்டப்படியான பதவியில் உள்ள முதலமைச்சர் கடவுளை வைத்து அரசியல் செய்யக்கூடாது.திருப்பதி கோயிலுக்கு எத்தனை ஒப்பந்ததாரர்கள் நெய் விற்பனை செய்தனர்.ஒப்புதல் அளிக்கப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருந்ததா?.கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நெய், திருப்பதி லட்டு செய்யப் பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
திருப்பதி லட்டில் கலப்படம் குறித்து கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்து அதன் அறிக்கையை டிசம்பர் மாதம் வெளியிட்டதன் காரணம் என்ன?
முதல்வர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள்,இந்த விவகாரத்தை நேரடியாக ஊடகங்களிடம் ஏன் எடுத்துச் சென்றீர்கள்?
பக்தர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் இதுபோன்ற ஒரு அறிக்கை மாநில அரசால் வெளியிடப்பட்டிருக்க வேண்டுமா?.
எனவே இந்த விவகாரத்தில்,அரசு நியமித்துள்ள சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டுமா? வேறு குழு அமைக்க வேண்டுமா? என்பது குறித்து மத்திய அரசின் கருத்தை அறிய வழக்கு வரும் அக்டோபர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிபதிகளின் இந்தக் கருத்துகள் சந்திரபாபுவுக்குப் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளன.இதனால் அவர் கடும்அதிர்ச்சி அடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.