உலக பாதுகாப்பு மாநாடு டெல்லியில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது…..,
நாட்டில் சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு எவ்வளவு தான் அபராதம் விதிப்பது? அபராதத் தொகையை அரசுஉயர்த்திக் கொண்டே போக முடியாது. இந்தச்சிக்கலுக்குத் தீர்வுகாண, சாலைகளைப் பயன்படுத்துவோரின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
சாலை விதிகளை உறுதியாக அமல்படுத்த புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறோம். விதி மீறுபவர்களுக்கு அபராதத் தொகையையும் அதிகரித்து விட்டோம். ஆனாலும் எந்தப்பலனும் ஏற்படவில்லை.
2019 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தங்கள் கொண்டு வந்தது. அதன்படி அபராதத் தொகை உயர்த்தப்பட்டது. அதன்பிறகும் சாலைவிதிமீறல்கள் அதிகரித்துதான் வருகின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.
2022 ஆம் ஆண்டு மட்டும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் விபத்தில் சிக்கி 50,029 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும் என்று பலர் பேசிவருகின்றனர்.
ஆனால், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்து நடுத்தட்டு மற்றும் அடித்தட்டு மக்களிடம் பெரும் தொகையை அபராதம் என்கிற பெயரில் வசூலித்தும் பலனில்லை என்பதை சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே சொல்லியிருக்கிறார்.
அதோடு நில்லாமல் மக்கள் மனநிலை மாற்றம் தான் தீர்வு என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
அரசாங்களும் அதிகாரத்திலிருப்போரும் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய செய்தி இது என்று சமுதாய ஆர்வலர்கள் கூறுகின்றனர்.