மோடி அமைச்சரவையில் தமிழ்நாட்டுக்கு 52 ஆம் இடம் – 71 அமைச்சர்கள் பட்டியல்

இந்திய ஒன்றியத்தின் 18 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், சுயேச்சைகள் 16 இடங்களிலும் வெற்றி பெற்றன.

கடந்த 2 மக்களவைத் தேர்தல்களிலும், தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 272 தொகுதிகளுக்கும் அதிகமாக அசுர பலத்துடன் வென்ற பாஜக இம்முறை 240 இடங்களை மட்டுமே பெற்றது.அதனால், கூட்டணிக் கட்சிகள் தயவுடன் 3 ஆவது முறையாக ஆட்சி அமைத்தது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று கோலாகலமாக நடந்தது.விழாவில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பாஜக மூத்த தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு, ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் மற்றும் திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள், மதத் தலைவர்கள், அண்டை நாடுகளின் தலைவர்கள் என 9,000 பேர் பங்கேற்றனர்.

விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். பதவி ஏற்பு விழாவையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், ஜனாதிபதி மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஜூன் 9 இரவு 7.23 மணிக்கு விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். முதல் நபராக மோடி தொடர்ந்து 3 ஆவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி முர்மு பதவிப் பிரமாணமும், இரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

மோடியைத் தொடர்ந்து, இராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் ஒன்றிய அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர். நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் என முந்தைய பாஜக ஆட்சியில் ஒன்றிய அமைச்சர்களாக இருந்த 39 பேர் மீண்டும் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர். 2020 ஆம் ஆண்டு முதல் பாஜக தேசியத் தலைவராக இருந்த ஜெ.பி.நட்டா இம்முறை அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

இதுதவிர, மபியின் முன்னாள் முதல்வரும் 18 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தவருமான சிவராஜ் சிங் சவுகான் முதல் முறையாக ஒன்றிய அமைச்சராகப் பதவி ஏற்றார். இதே போல,அரியானா மாநில முன்னாள் முதல்வரான மனோகர்லால் கட்டார், அசாம் மாநில முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மஜத தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி, பீகார் முன்னாள் முதல்வரான இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சி தலைவர் ஜிதன் ராம் மஞ்சி ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.

பாஜக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவரான ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜிவ் ரஞ்சன் லாலன், தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகவும், சிவசேனா ஷிண்டே அணியின் பிரதாப்ராவ் ஜாதவ், ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோர் தனிப் பொறுப்பு இணை அமைச்சர்களாகவும், கேரளாவில் பாஜகவுக்கு வெற்றி தேடித்தந்த திருச்சூர் எம்பியான நடிகர் சுரேஷ் கோபி இணை அமைச்சராகவும் பதவியேற்றனர்.

மொத்தம் 72 அமைச்சர்களுடன் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழா இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து பல்வேறு சிறப்பு விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரவு விருந்து அளித்தார்.

கடந்த முறை அமைச்சர்களாக இருந்தவர்களில் 32 பேருக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 72 அமைச்சர்களில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் பிரதமர் மோடி உட்பட 61 பேர்.

கூட்டணிக் கட்சிகளுக்கு 11 அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் 15 சதவீதம் அதாவது 81 என்பதே அமைச்சரவையின் உச்சபட்ச பலமாகும். எனவே இன்னும் 9 அமைச்சர்களை சேர்க்க முடியும்.

கேபினட் அமைச்சர்கள்
1. ராஜ்நாத் சிங்
2. அமித்ஷா
3. நிதின் கட்கரி
4. ஜெ.பி.நட்டா
5. சிவராஜ் சிங் சவுகான்
6. நிர்மலா சீதாராமன்
7. ஜெய்சங்கர்
8. மனோகர் லால் கட்டார்
9. குமாரசாமி
10. பியூஸ் கோயல்
11. தர்மேந்திர பிரதான்
12. ஜிதன் ராம் மஞ்சி
13. லாலன் சிங்
14. சர்பானந்தா சோனோவால்
15. வீரேந்திர குமார்
16. ராம் மோகன் நாயுடு
17. பிரகலாத் ஜோஷி
18. ஜூயல் ஓரம்
19. கிரிராஜ் சிங்
20. அஸ்வினி வைஷ்ணவ்
21. ஜோதிராதித்யா சிந்தியா
22. பூபேந்தர் யாதவ்
23. கஜேந்திர சிங் செகாவத்
24. அன்னபூர்ணா தேவி
25. கிரண் ரிஜிஜூ
26. ஹர்தீப் சிங் பூரி
27. மன்சுக் மாண்டவியா
28. கிசன் ரெட்டி
29. சிராக் பஸ்வான்
30. சி.ஆர்.பாட்டீல்

* இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)
31. ராவ் இந்திரஜித் சிங்
32. ஜிதேந்திர சிங்
33. அர்ஜூன் சிங் மேக்வால்
34. பிரதாப் ராவ் யாதவ்
35. ஜெயந்த் சவுத்ரி

* இணை அமைச்சர்கள்
36. ஜிதின் பிரசாதா
37. ஸ்ரீபத் யஸ்ஸோ நாயக்
38. பங்கஜ் சவுத்ரி
39. கிரிஷன் பால்
40. ராம்தாஸ் அலுவாலே
41. ராம்நாத் தாக்கூர்
42. நித்யானந்த் ராய்
43. அனுபிரியா படேல்
44. வி.சோமண்ணா
45. பெம்மசானி சந்திரசேகர்
46. எஸ்.பி.சிங் பாகேல்
47. சோபா கரண்டலேஜ்
48. கீர்த்தி வர்தன் சிங்
49. பி.எல்.வர்மா
50. சாந்தனு தாகூர்
51. சுரேஷ் கோபி
52. எல்.முருகன்
53. அஜய் தாம்டா
54. பண்டி சஞ்சய் குமார்
55. கமலேஷ் பஸ்வான்
56. பாகிரத் சவுத்ரி
57. ரன்வீத் சிங்
58. சதிஷ் துபே
59. சஞ்சய் சேத்
60. துர்கா தாஸ் உய்கி
61. ரக்‌ஷா காட்சே
62. சுகந்தா மஜூம்தர்
63. சாவித்ரி தாகூர்
64. தோகான் சாஹூ
65. ராஜ் பூஷண் சவுத்ரி
66. பிஆர்எஸ் வர்மா
67. ஹர்ஷ் மல்ஹோத்ரா
68. நிமுபென் பம்பானியா
69. முரளிதர் மோஹோல்
70. ஜார்ஜ் குரியன்
71. பபித்ரா மார்கிரிடா

Leave a Response