
இந்திய ஒன்றியம் முழுவதும் 7 கட்டங்களாக பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்டத் தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், ஆறாவது கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
அதன்படி, உத்தர பிரதேசத்தில் 14, அரியாணாவில் 10, மேற்கு வங்கத்தில் 8, பிகாரில் 8, டெல்லியில் 7, ஒடிசாவில் 6, ஜார்க்கண்டில் 4, காஷ்மீரில் 1 தொகுதி என மொத்தம் 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில், 5.84 கோடி ஆண்கள், 5.29 கோடி பெண்கள், 5,120 பேர் மூன்றாம் பாலினத்தவர் என 11.13 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். மொத்தம் 1.14 இலட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 11.4 இலட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதில்,அரியானா முன்னாள் முதல்வர்கள் மனோகர் லால் கட்டார், மெகபூபா முப்தி (காஷ்மீர்), முன்னாள் ஒன்றிய அமைச்சர் மேனகா காந்தி, மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உட்பட மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலோடு ஒடிசாவில் 42 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
