அல்ஹம்துலில்லாஹ் – முதல் ஐபிஎல் போட்டியை வென்றது சென்னை அணி

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் எனப்படும் 20 ஓவர் மட்டைப்பந்துப் போட்டி நேற்று (மார்ச் 22) கோலாகலமாகத் தொடங்கியது.

இதன் முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதின.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு எட்டு மணியளவில் போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் தலைவர் டூப்ளசி மட்டைபிடிக்க முடிவு செய்தார்.

விராட்கோலியும் டூப்ளசியும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.டூப்ளசி, 23 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரஜத் பட்டிதார், மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலியும், கேமரூன் கிரீனும் இணைந்து நன்றாக விளையாடினர். ஆனால், அந்தக் கூட்டணியை தகர்த்தார் முஸ்தாபிசூர் ரகுமான்.

அதன்பின், தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் இணைந்து 95 ஓட்டங்கள் எடுத்தனர். அது பெங்களூரு அணிக்குப் பலமாக அமைந்தது. அனுஜ், 25 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக், 26 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் 6 வீரர்களை இழந்து 173 ஓட்டங்கள் எடுத்திருந்தது பெங்களூரு அணி.சென்னை அணியின் பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் 4 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார்.

அடுத்து,174 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரட்டியது.அணித்தலைவர் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணைந்து ஆட்டத்தைத் தொடங்கினர். ருதுராஜ், 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 15 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்து ரச்சின் வெளியேறினார். ரஹானே 27, மிட்செல் 22 ஓட்டங்கள் எடுத்தனர்.

ஷிவம் துபே மற்றும் ஜடேஜா இணைந்து பொறுப்புடன் ஆடினர். இருவரும் இணைந்து 66 ஓட்டங்கள் எடுத்தனர்.துபே, 28 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்தார். ஜடேஜா, 17 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
அதன் பலனாக 18.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது சென்னை.

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனை வெற்றியுடன் சிஎஸ்கே தொடங்கியுள்ளது.

ஆட்டநாயகனாக முஸ்தாபிசூர் ரகுமான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது…

எல்லாவற்றிற்கும் கடவுளுக்கு நன்றி(அல்ஹம்துலில்லாஹ்). அணியின் வெற்றிக்குப் பங்களிப்பது எப்போதுமே சிறப்பானதாக உணர வைக்கிறது. நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவுக்காக உங்கள் அனைவருக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்!

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response