இதுவரை பாஜக வெற்றி பெற இதுதான் காரணம் – இராகுல்காந்தி சொல்லும் அதிர்ச்சித் தகவல்

காங்கிரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை சனவரி 16 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் வழியாக இந்தப் பயணம் மும்பையில் நேற்று நிறைவடைந்தது.

இதனை முன்னிட்டு இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற்றது.

இதில் இராகுல்காந்து பேசியதாவது…..

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்குக் காரணமே வாக்குப்பதிவு இயந்திரம்தான்.எங்களிடம் அந்த இயந்திரங்களைக் காண்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம்.ஆனால், அவர்கள் ஏன் அதனைச் செய்யவில்லை? ஏனென்றால்,பிரதமர் மோடியின் ஆன்மா அதில்தான் உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி ஒரு முகமூடிதான்.அவருக்கு 56 அங்குல மார்பு இருக்கிறது என்கின்றனர்.ஆனால், அவர் வெறும் கூடுதான்.

அசல் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை மடைமாற்றும் பணியை பிரதமர் மோடி சிறப்பாகச் செய்வார். சீனா அல்லது பாகிஸ்தான் சார்ந்த பிரச்சினைகள் இருக்கும்.ஆனால் அவரோ, விளக்கு ஏற்றுங்கள் அல்லது மொபைல் போனை ஆன் செய்யுங்கள் எனச் சொல்வார். நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து என்னைப் பேச வேண்டாம் என மறைந்த அருண் ஜெட்லி கேட்டுக் கொண்டார். மீறினால் சிறை செல்ல வேண்டி இருக்கும் எனத் தெரிவித்தார்.

ஊழலில் ஏகபோக ஆதிக்கத்தைக் கொண்டுள்ள ஒற்றை மனிதராக பிரதமர் மோடி உள்ளார். தேர்தல் பத்திர விவகாரம், கமிஷன் கொடுப்பது, பணியாதவர்கள் மிரட்டுவது.

நாங்கள் தனியொரு நபரான மோடி அல்லது பாஜகவை எதிர்த்துப் போராடவில்லை. சக்தியை எதிர்த்து போராடுகிறோம். இந்த சக்தி, வாக்குப்பதிவு இயந்திரம், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் வசம் உள்ளது. இந்த சக்திக்கு அஞ்சியே சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர் எதிரணியில் ஐக்கியமாகி உள்ளனர்.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட நாட்டின் முக்கிய தகவல் தொடர்பு அமைப்பு நாட்டின் கைகளில் இல்லை. இதனால்தான் நாங்கள் இந்த யாத்திரையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம், வன்முறை, பணவீக்கம், விவசாயிகள் பிரச்னை போன்ற பொதுமக்கள் கவலைப்படும் விசயங்கள் எதுவும் வெளிக்காட்டப்படுவதில்லை. நாட்டின் கவனத்தை ஈர்க்க, நாங்கள் 4,000 கி.மீ நடக்க வேண்டியிருந்தது.

இவ்வாறு இராகுல்காந்தி பேசினார்.

Leave a Response