கழற்றி விடப்பட்ட ஓபிஎஸ் டிடிவி – மீண்டும் எடப்பாடி மோடி கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டில் 4 ஆவது முறையாக பிரதமர் மோடி நேற்று தமிழ்நாடு வந்தார்.

விமானம் மூலம் நேற்று காலை சென்னை வந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் சென்று, விரைவு ஈனுலையைத் தொடங்கி வைத்தார். பின்னர், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இந்தக் கூட்டத்தில்,ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் கரு.நாகராஜன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களான தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், தலைவர் இரவி பச்சமுத்து, தமமுக தலைவர் ஜான் பாண்டியன், காமராஜர் மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தேவநாதன் யாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஆனால்,முக்கிய தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. கடந்தவாரம் நடைபெற்ற பல்லடம் கூட்டத்திலும் இவர்கள் கலந்துகொள்ளவில்லை. அப்போது சென்னை பொதுக்கூட்டத்தில் இவர்கள் கலந்துகொள்வார்கள் என்று சொல்லப்பட்டது.ஆனால் சென்னையிலும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.

ஏன்?

தமிழ்நாட்டில் கணிசமான வாக்குவங்கியை எடப்பாடிபழனிச்சாமியின் அதிமுக வைத்திருக்கிறதென்று நம்பி அவரோடு கூட்டணி வைக்கவேண்டும் என்று பாஜகவின் முன்னணியினர் சொல்லிவருகிறார்களாம். அதனால் எடப்பாடி பழனிச்சாமியின் ஒரே கோரிக்கையான சசிகலா, ஓ.பன்னீர்செல்வம்,டிடிவி.தினகரன் ஆகியோர் இல்லாத அதிமுக என்பதை ஏற்று அவரைக் கூட்டணியில் சேர்க்கலாம் என்று பாஜக சிந்திக்கிறது என்கிறார்கள்.

இதனால், மோடியை மீண்டும் பிரதமராக்கப் பாடுபடுவோம் என்று தாமாகவே முன்வந்து அறிவித்த ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தின்கரன் ஆகியோரைக் கழற்றிவிட்டுவிட்டு எடப்பாடி பழனிச்சாமியைச் சேர்க்கத் திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டுவருகிறது பாஜக என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்தத் தகவலறிந்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோர் பேரரதிர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதேபோல பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் எடப்பாடி அதிமுக வேண்டும் என்று போன பிரேமலதா,மருத்துவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் அதிர்ந்து போயிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Leave a Response