ஆளுநரின் செயல் – தேர்தலில் பாஜகவுக்குப் பாதிப்பு

ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அந்த வகையில், சனவரி இராண்டாவது வாரத்தில் பேரவை கூடும். ஆனால் இந்த ஆண்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் சென்றார்.அதன் காரணமாக பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடும் என்று சபாநாயகர் அப்பாவு கடந்த வாரம் அறிவித்தார்.

அதன்படி சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 10 மணிக்குக் கூடியது.இதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி 9.57 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்துக்கு வந்தார். அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று பேரவைக்குள் அழைத்து வந்தனர். அவருடன் செயலாளர் கிர்லோஷ் குமார் வந்தார்.

சரியாக, காலை 9.59 மணிக்கு சட்டப்பேரவை கூட்ட அரங்குக்கு வந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.அதனைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

சரியாக காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பேச்சைட் தொடங்கினார். முதலில் தமிழில், மதிப்பிற்குரிய சட்டப்பேரவைத் தலைவர் அவர்களே, மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே, மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர்களே, பேரவை அலுவலர்களே, ஊடக நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் என்று பேசிவிட்டு ஆங்கில உரையைப் படித்தார்.

அப்போது, 2024 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் எனது உரையை நிகழ்த்துவதை நான் பெரும்பேறாக கருதுகிறேன்.

அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளைட் தெரிவித்துக்கொள்வதோடு, இந்த புத்தாண்டில் நமது மாநிலத்தில் மகிழ்ச்சியும், வளமும், நலமும் தழைத்தோங்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த இந்த அரசின் உயர்ந்த நோக்கங்களை, காலத்தை வென்ற அய்யன் திருவள்ளுவரின் குறள் ஒன்றைக் குறிப்பிட்டு, எனது உரையைத் தொடங்க விரும்புகின்றேன். ‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து’. அதாவது, மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு.

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

தொடர்ந்து, உரையை வாசிக்காமல், தேசிய கீதம் குறித்த சில கருத்துகள் மற்றும் சில வார்த்தைகளை மட்டும் தெரிவித்துவிட்டு இத்துடன் எனது உரையை நிறைவு செய்கிறேன் என்று கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.

இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது. 4 நிமிடங்கள் மட்டுமே அவர் உரையாற்றினார். மொத்தம் 46 பக்கங்களைக் கொண்ட ஆளுநர் உரையில் ஒரு பக்கத்தை மட்டுமே படித்துவிட்டு அமர்ந்து விட்டார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையை காலை 10.05 மணிக்கு தமிழில் வாசிக்கத் தொடங்கினார். சரியாக, காலை 10.48 மணிக்கு சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார்.

இதைதொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, சில வார்த்தைகள் பேசினார். அவரது பேச்சு பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. சபாநாயகர் என்ன பேசுகிறார் என்பதை, ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது செயலாளர் கிர்லோஷ் குமாரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். சபாநாயகர் பேசி முடித்ததும், அவை முன்னவர் துரைமுருகன் எழுந்து தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். அவர் தீர்மானத்தைப் படித்துக் கொண்டிருந்தபோதே, ஆர்.என்.ரவி எழுந்து அவையை விட்டு வெளியேறினார். அவருடன் செயலாளர் கிர்லோஷ் குமாரும், பாதுகாவலரும் சென்றனர். இதனால், மீண்டும் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானத்தில் கூறி இருந்ததாவது: தற்போது இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரின் தொடக்கமாக சட்டசபை மரபுகளின்படி ஆளுநரின் உரை நிகழ்ந்துள்ளது. ஆளுநர் தனது உரையை வாசித்த பின்னர், சபாநாயகராகிய தாங்களும் அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தினை அவையில் வாசித்தீர்கள். இது தொடர்பாக சட்டசபை விதி 17-ஐ தளர்த்தி, பின்வரும் தீர்மானத்தை இப்பேரவையில் முன்மொழிகின்றேன்.

2024 ஆம் ஆண்டுக்கான இந்த முதல் கூட்டத்தொடரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆளுநர் உரை இந்த மன்றத்திற்கு வழங்கப்பட்டபடியே அவைக்குறிப்பில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என்னும் தீர்மானத்தை முன்மொழிகின்றேன் என்றார். அந்த தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அப்பாவு, இன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆளுநர் உரையின் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சிடப்பட்ட பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும். வேறு எவையும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றார். இதைத்தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் முடிந்தது. சட்டப்பேரவையில் இருந்து, தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையின்போது, அரசு தயாரித்த உரையின் சில பத்திகளை ஆர்.என்.ரவி வாசிக்காமல், சில வரிகளை அவரே சேர்த்தும் வாசித்தார். இதனால், சட்டப்பேரவையில் இருந்த உறுப்பினர்கள் அவரது செயலைக் கடுமையாகச் சாடினர். உடனடியாக ஆளுநர் தானாக சேர்த்துப் படித்த பகுதி அவைக் குறிப்பில் இடம் பெறக் கூடாது என்றும், அரசின் சார்பில் தயாரித்து சபைக்கு அளிக்கப்பட்ட உரையே இடம் பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையைப் படிக்காமல் புறக்கணித்த சம்பவம் பேரவையில் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களிடம் மட்டுமின்றி ஒன்றியம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

ஆளுநரின் இந்தச் செயல் பாஜக அரசுக்கு எதிரான தேர்தல் பரப்புரைக்குப் பலம் சேர்த்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response