தமிழால் வென்றேன் – சாதனை மாணவி பெருமிதம்

2022 -23 கல்வியாண்டுக்கான பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்விஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் மே 8,2023 அன்று காலை 10.07 மணிக்கு வெளியிட்டார். தேர்வுத் துறை இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தேர்வு எழுதியதில் 7 இலட்சத்து 55,451(94.03%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.27 விழுக்காடு அதிகம். மாணவிகள் 96.38 விழுக்காடும், மாணவர்கள் 91.45 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 4.93 விழுக்காடு அதிகம். 2013 ஆம் ஆண்டு முதல் தேர்ச்சி விகிதத்தில், மாணவிகளே முன்னிலை வகிக்கும் நிலையில், இந்த ஆண்டும் அந்த சாதனை தொடர்ந்துள்ளது.

திண்டுக்கல்லில் உள்ள அரசு உதவிபெறும் அண்ணாமலையார் மில்ஸ் மேல்நிலைப் பள்ளி மாணவி ச.நந்தினி.

இவர் தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், கணக்குப் பதிவியல் (அக்கவுன்டன்சி), கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய அனைத்துப் பாடங்களிலும் 100-க்கு 100 என மொத்தம் 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இவரது தந்தை சரவணக்குமார், தச்சுத்தொழிலாளி. தாய் பானுப்பிரியா, தம்பி பிரவீன்.

இது குறித்து மாணவி ச.நந்தினி கூறியதாவது,

தமிழைப் பாடமாகப் படிக்காமல், தாய்மொழி என்ற உணர்வோடு படிக்க வேண்டும் என்று தமிழ் ஆசிரியை அனுராதா சொல்லிக் கொடுத்தார்.அதனால் தமிழ்மீது ஆர்வங்கொண்டு படித்தேன், கதை, கவிதை, கட்டுரை, இலக்கணம் ஆகியனவற்றை விரும்பிப்படித்தேன்.நான் நான் கேட்கும் சந்தேகங்களுக்கு அனைத்துப் பாட ஆசிரியர்களும் பதில் அளித்துப் புரியவைத்தனர். இதனால்தான் அனைத்துப் பாடங்களிலும் 100-க்கு 100 பெற முடிந்தது. நான் தனிப்பயிற்சிக்குச் (டியூசன்) செல்லவில்லை. படிப்புதான் நமக்கு சொத்து என்று சொல்லி பெற்றோர் வளர்த்தனர். ஆடிட்டர் ஆகவேண்டும் என்பது என் குறிக்கோள்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response