குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வந்தது. குஜராத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியிலும், இமாச்சலில் ஜனவரியிலும் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது.
இதனால், 68 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட இமாச்சல் பிரதேசத்திற்கு நவம்பர் 12 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் 76.44% வாக்குகள் பதிவாகின.
182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. இதில் 66.31% வாக்குகள் பதிவாகி இருந்தன.
தேர்தலில் பதிவான வாக்குகள் இமாச்சலில் 59 மையங்களிலும், குஜராத்தில் 37 மையங்களிலும் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
குஜராத்தில் தொடக்கம் முதலே பாஜக ஆதிக்கம் செலுத்தியது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரசு 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது.ஆம் ஆத்மி 5 தொகுதிகளைக் கைப்பற்றியது. சமாஜ்வாடி ஒரு இடத்திலும், மற்றவை 3 இடங்களிலும் வென்றது.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் 1,92,263 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் 2 ஆவது முறையாக வெற்றி பெற்று, குஜராத் மாநிலத்தின் முதல்வராக 2 ஆவது முறையாக வரும் 12 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
68 தொகுதிகள் கொண்ட இமாச்சலில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலில் இருந்தே பாஜக முன்னிலை பெற்றது. ஒரு மணி நேரத்துக்குப் பின் காங்கிரசு முன்னிலை பெற்றது. இரு கட்சிகளும் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மாறி மாறி முன்னிலை பெற்றனர். மதியத்துக்குப் பின் காங்கிரசுக் கட்சியே தொடர்ந்து அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
இறுதியில் 40 தொகுதிகளில் காங்கிரசும், பாஜக 25 தொகுதிகளிலும், மற்றவை மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.67 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.
குஜாரத்தில் பாஜக வெற்றி பெற்றதாலும், இமாச்சலில் காங்கிரசு ஆட்சியைப் பிடித்ததாலும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாகக் கொண்டாடினர்.