குடியரசு துணைத்தலைவருக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

“தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணையச் சட்டம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் அந்தப் பிரச்சனையில் நாடாளுமன்றம் தனது கவனத்தை செலுத்தவில்லை என்பது கவலையளிக்கிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண நாடாளுமன்றம் கடமைப்பட்டுள்ளது” என இந்திய மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் உள்பட உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமன முறையை அரசியல்மயப்படுத்தும் வகையிலும், தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் வகையிலும், இந்திய அரசு கொண்டுவந்த சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்மூலம் உச்சநீதிமன்றம் சுதந்திரத்துடன் செயல்பட்டு நீதி வழங்கும் முறை பாதுகாக்கப்பட்டது. இல்லையேல் தேர்தல் ஆணையத்தின் ஆணையர்கள் இந்திய அரசின் விருப்பு வெறுப்புகளுக்குட்பட்டு செயல்படும் நிலைக்கு ஆளாகித் தவிப்பதைப் போன்ற நிலைமை உச்சநீதிமன்றத்திற்கும் ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

மாநிலங்களவைத் தலைவராகப் பதவி ஏற்றதுமே அரசியல் சட்ட மாண்பைச் சீர்குலைக்கும் வகையிலும், உச்சநீதிமன்றத்தின் நீதி வழங்கும் முறையைக் கண்டித்தும் பேசியுள்ள ஜகதீப் தன்கரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response