சர்ச்சையில் சிக்கிய பொன்னியின்செல்வன் தயாரிப்பாளர்

அல்லிராஜா சுபாஸ்கரன் இலண்டனில் பெரும் தொழிலதிபராக இருக்கிறார். உலகத்தின் பல நாடுகளிலும் தன் தொழிலை விரிவுபடுத்திப் பெரிய அளவில் உலா வந்து கொண்டிருக்கும் அவருக்கு தமிழகத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் என்கிற அறிமுகம் இருக்கிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் என்கிற திரைப்பட நிறுவனத்தின் மூலம் ஏராளமான திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். அவருடைய தயாரிப்பில் விரைவில் பொன்னியின் செல்வன் என்கிற திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் அவர் ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஏற்கெனவே இராஜபக்சே குடும்பத்துடன் தொழில் உறவு வைத்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு இரண்டகம் செய்துவருகிறார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது இருக்கிறது.

இந்நிலையில் அக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்வு நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இலண்டனில் செப்டம்பர் 19 ஆம் தேதி இப்போதைய இலங்கை அதிபர் ரணில்விக்கிரமசிங்கேவை அவர் சந்தித்திருக்கிறார்.

இராஜபக்சே சகோதரர்களின் பினாமியாக ரணில் அதிபர் பொறுப்பு வகிக்கிறார் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.
இன்னொரு பக்கம், பிரித்தானிய மகாராணியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள இலண்டன் சென்ற ரணில்விக்கிரமசிங்கேவுக்கு எதிராக அங்குள்ள தமிழ் மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தச் சூழலில், ரணிலை சுபாஸ்கரன் சந்தித்திருக்கிறார். அதோடு அந்தச் சந்திப்பில், இலங்கைச் சிறைகளில் பல்லாண்டுகளாக வாடிக் கொண்டிருக்கும் தமிழ் கைதிகளை விடுதலை செய்ய சுபாஸ்கரன் கோரிக்கை வைத்ததாகவும் அதை ரணில் ஏற்றுக் கொண்டதாகவும் செய்தி பரப்பப்பட்டது.

இதனால் ஈழத்தமிழ் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். பல்லாண்டுகளாக சிங்களச் சிறைகளில் வாடும் தமிழர்களின் பட்டியல் பலமுறை சிங்கள ஆட்சியாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து பிரதமர் கேமரூன் 2013 இல் யாழ்ப்பாணம் சென்றபோது அவரிடமும் தமிழ்மக்கள் நேரில் முறையிட்டார்கள்.

சிங்கள அரசியல்தலைவர்கள் எதற்கும் மசியாமல் தமிழர்களை விடுவிக்காமல் இருக்கின்றனர்.

இந்நிலையில் அச்சிக்கலைத் தீர்த்து வைக்க நான் முயல்கிறேன் என்று சொல்லும் சுபாஸ்கரனுக்கு தமிழ்மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

உங்கள் வர்த்தக நலனுக்காக சிங்கள அதிபர் ரணிலைச் சந்தித்துவிட்டு அச்செய்தி வெளியே தெரிந்துவிட்டது என்பதால் தமிழர்கள் நலனுக்காகச் சந்தித்தேன் என்று சொல்வது அப்பட்டமான இரண்டகம். உங்கள் தொழிலை நீங்கள் பாருங்கள் எங்கள் சிக்கலை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று காட்டமாக விமர்சனம் செய்துவருகிறார்கள்.

Leave a Response