எடப்பாடி அணி சமஉ ஓபிஎஸ்சுக்கு ஆதரவு

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர்.இருவரில் யார் பலசாலி? என்கிற பலப்பரீட்சை தற்போது நடந்துவருகிறது.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையில் நடிகர் பாக்யராஜ் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது தனது ஆதரவை ஓபிஎஸ்சுக்கு தெரிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று, சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் வந்து சந்தித்தார்.

அப்போது வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் இருந்தனர்.

ஐயப்பனுடன் அதிமுக கட்சி நிர்வாகிகள், அதிமுக வழக்கறிஞர்கள் சிலரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஐயப்பன், மதுரை மாவட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்தவர். இவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தீவிர ஆதரவாளர் ஆவார். இதுவரை எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்த உசிலம்பட்டி ஐயப்பன் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறி உள்ளது எடப்பாடி அணியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழு, ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு என்ற பெயரில் நடத்திய நாடகம் ஆகியவை, அதிமுக இயக்கம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது. தொண்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். எங்களது கருத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சியில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்சியை ஆரம்பித்தது ஏழை எளிய மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான். அதனால்தான் நானும் இணைந்து செயல்படுவோம் என்கிறேன்.

ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், அவருடைய முழு அறிக்கை முதல்வரிடம் தரப்பட்டுள்ளது. அறிக்கையை முழுவதுமாக படித்துப் பார்த்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி, ஜெயலலிதா அணி என பிரிந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறோம். அப்போது, தலைவர்கள் இணைவதற்கு முன்னே தொண்டர்கள் இணைந்தார்கள். அதேபோல்தான் இன்றைக்கும் உண்மை நிலைமை அறிந்த பிறகுதான் தொண்டர்கள் இணைந்து வருகிறார்கள். உறுதியாக அதிமுக கட்சியை ஒன்றுபட்டு செயல்படுத்த மாவட்டம் தோறும் புரட்சிப் பயணம் செல்வேன். கட்சி நலன் கருதி சசிகலா, டிடிவி.தினகரனை விரைவில் சந்தித்துப் பேசுவேன். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் அணிக்கு உறுதியாக வருவார்கள். அவர்கள் யார் என்பது? பரம ரகசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response