அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு? உயர்நீதிமன்றத் தீர்ப்பு விவரம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமியும்,ஓ.பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, காவல்துறை தரப்பில் காணொலி ஆதாரங்களும், அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சம்பவ இடத்தில் பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு வீரர்களைத் தவிர வேறு எந்த காவல்துறையினரும் இல்லை. என்ன நடந்தது என்பதற்கு காணொலி ஆதாரங்களே போதுமானது. கட்சி அலுவலகம் அவருக்குச் சொந்தமானதாக இருந்தால் அவர் ஏன் அலுவலகக் கதவை உடைத்து கோப்புகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று வாதிட்டார்.

பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஏ.ரமேஷ், அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர் சி.திருமாறன் ஆகியோர் ஆஜராகி, கட்சி அலுவலகத்தின் உரிமை யாருக்கு என்பதை உரிமையியல் நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும். கட்சி அலுவலகம் யாரிடம் இருக்கிறது என்றுதான் ஆர்.டி.ஓ பார்க்க வேண்டுமே தவிர, யாருக்கு உரிமை உள்ளது என்பதைத் தீர்மானிக்க முடியாது. இரு தரப்பினருக்கும் இடையே உள்ள சர்ச்சையை நீதிமன்றம் மட்டுமே தீர்க்க வேண்டும். அதுவரை அலுவலகத்தை மூடி வைத்திருக்கலாம் என்று வாதிட்டார். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கின் நீதிபதி சதீஷ்குமார் நேற்று தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்த அன்று ஒ.பன்னீர்செல்வம் அணியினர் அலுவலகத்துக்குச் செல்லும்வரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் நுழைந்த பிறகே இலேசான தடியடியை நடத்தி உள்ளனர். பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தது, வன்முறையைக் கட்டவிழ்த்தது போன்றவற்றைச் செய்திருக்கக் கூடாது.

எடப்பாடி பழனிச்சாமியும் தனது ஆதரவாளர்களைக் கட்சி அலுவலகத்தில் அனுமதித்து இருக்கக்கூடாது. இரு தலைவர்களும் சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றி கருத்தில் கொள்ளவில்லை.

காவல்துறை உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வன்முறை தடுக்கப்பட்டிருக்கும். பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் கட்சியின் பெருமான்மையினரின் முடிவு. அவற்றை உரிமையியல் நீதிமன்றம் இரத்து செய்யாத வரை அந்த முடிவே மேலோங்கி நிற்கும்.

ஒ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் கட்சி அலுவலகக் கட்டடத்தின் மீதான சுவாதீன உரிமையைக் கோர முடியாது. கட்சியில் இரு பிரிவினருக்கு இடையிலான பிரச்னை என்பது சொத்தில் சுவாதீனம் சம்பந்தப்பட்டதா, இல்லையா என்பது வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவில் குறிப்பிட்டு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் கட்சியின் இரு பிரிவினர் இடையேயான பிரச்னை என்று மட்டுமே சொல்லப்பட்டு உள்ளது. கோட்டாட்சியர் உத்தரவில் ஜூலை 11 ஆம் தேதி கட்சி அலுவலகம் யார் தரப்பிடம் இருந்தது என்று கூறப்படவில்லை. ஆனால் அந்த தகராறு மாநிலம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

மோதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே ஆர்.டி.ஓ. உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பிரச்னையில் மனதை செலுத்தாமல் இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.ஜூலை 5 முதல் 11ம் தேதி வரை கட்சி அலுவலகத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது கட்சி அலுவலகம் ஒ.பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது. காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டில் கட்சி அலுவலகம் இருந்ததும் தெளிவாகிறது. பொதுக்குழு மற்றும் வன்முறை நடந்த ஜூலை 11 ஆம் தேதி கட்சி அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் இருந்தது என்று எவ்வித விசாரணையும் நடத்தாமல் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு தவறு.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டவர், அந்தக் கட்சி அலுவலகத்தில் எவ்வித உரிமையும் கோர முடியாது. தனிப்பட்ட நபருக்குச் சொந்தமல்லாத கட்சி அலுவலகத்தை உடைத்து அலுவலகத்திற்குள் நுழைந்தது அத்துமீறி நுழைவதாகத்தான் கருத வேண்டும். சீல் வைக்க வேண்டும் என்றால் நிலம், மற்றும் அசையா சொத்துகள் தொடர்பான உண்மையான பிரச்னை இருக்க வேண்டும். கலவரத்தை உருவாக்கி பிரச்னை இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது என்பது கட்சி அலுவலகத்தில் உண்மையான பிரச்னையாக கருத முடியாது.

பொதுக்குழுக் கூட்டத்தைத் திசை திருப்ப ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இதுபோன்ற பிரச்னைதான் இறுதியானது என்று வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர். கட்சியில் பெரும்பான்மையானவர்களின் முடிவே இறுதியானது. அதை விடுத்து அலுவலகக் கதவை உடைத்து உள்ளே சென்று உரிமை கோர முடியாது. இது அத்துமீறி நுழைவதாகும். ஏற்கனவே, ஜூலை 8 ஆம் தேதி கட்சி தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்துறையிடம் மனு அளித்துள்ளார். அது காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. எனவே, இதிலிருந்து கட்சி அலுவலகம் எடப்பாடி பழனிச்சாமி அணியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது நிரூபணமாகியுள்ளது.

இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமலும், யார் கட்டுப்பாட்டில் அலுவலகம் உள்ளது என்பது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையை நடத்தாமலும் கோட்டாட்சியர், கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டது ஏற்கக் கூடியதல்ல. எனவே, கோட்டாட்சியரின் உத்தரவு இரத்து செய்யப்படுகிறது. காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், கட்சி தலைமை அலுவலகத்தின் சாவியை கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆர்.டி.ஓ. ஒப்படைக்க வேண்டும். காவல்துறை 24 மணி நேரமும் அதிமுக தலைமை அலுவலகத்துக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஒரு மாதத்திற்கு தனது ஆதரவாளர்கள், தொண்டர்களை கட்சி அலுவலகத்துக்குள் எடப்பாடி பழனிச்சாமி அனுமதிக்கக் கூடாது. காவல்துறை தாக்கல் செய்த காணொலி மற்றும் புகைப்பட ஆதாரங்களை உயர் நீதிமன்ற பதிவுத்துறை பாதுகாக்க வேண்டும்.சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற ஒ.பி.எஸ். கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இந்த வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவரது தரப்பு வழக்கறிஞர் சி.திருமாறன் கூறும்போது,

ஒரு சொத்தின் மீதான சுவாதீனம், உரிமை குறித்து இந்த வழக்கில் எந்த வாதங்களும் வைக்கப்படாத நிலையில் சொத்தை ஒருதரப்புக்கு ஒப்படைக்கும் உத்தரவு ஏற்கக் கூடியதல்ல. கோட்டாட்சியரின் அதிகாரத்தை உயர் நீதிமன்றம் இரத்து செய்ததை ஏற்க முடியாது. இது மேல் முறையீடு செய்யக்கூடிய வழக்கு. கண்டிப்பாக விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளோம். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response