அரசுப் பள்ளிகளில் தமிழ்ப்பாடவேளை குறைப்பு – மருத்துவர் இராமதாசு எதிர்ப்பு

நடப்பு கல்வியாண்டு கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. நடப்பு ஆண்டிற்கான பாடவேளைகள் குறித்த தகவல்களை பள்ளிக்கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி இருக்கிறது. அதில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலப் பாட வேளைகள் குறைக்கப்பட்டு இருக்கின்றன.

வாரத்திற்கு ஏழு பாடவேளைகள் என்று இருந்ததை, ஆறு பாட வேளைகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சமூக அறிவியல் பாடத்திற்குக் கூடுதலாக ஒரு பாடவேளை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன.

மேலும் நீதிபோதனை மற்றும் பல்வேறு மன்ற செயல்பாடுகளுக்கும் பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தமிழ்ப் பாடத்திற்கான பாட வேளையைக் குறைத்திருப்பது சரியல்ல என்றும், மீண்டும் பழைய படி வாரத்திற்கு ஏழு பாடவேளைகள் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு இதுகுறித்துக் கூறியிருப்பதாவது….

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 6 – 10 வகுப்புகளுக்கான தமிழ்மொழிப் பாடத்திற்கான பாடவேளைகளின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத் தேர்ச்சி விகிதம் குறைந்து வரும் வேளையில், இந்த முடிவு மிகவும் தவறானதாகும்.

வாரத்திற்கு ஒரு பாடவேளை நீதிபோதனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க, தேவையான நடவடிக்கை. அதற்காக ஆங்கிலப் பாடவேளையை குறைத்ததுடன் நிறுத்தியிருக்கலாம். தமிழ்ப் பாடவேளையையும் குறைத்திருக்கத் தேவையில்லை. அது தமிழுக்கு செய்யும் அவமரியாதை.

எனவே, தமிழ்ப் பாடவேளையைக் குறைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். முன்பிருந்தவாறே வாரத்திற்கு 7 பாடவேளைகளை தமிழுக்கு ஒதுக்க வேண்டும். தமிழ் மொழியை இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response