அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் – சசிகலா திடீர் பேச்சு

பூந்தமல்லி குமணன்சாவடி பகுதியில், வி.கே.சசிகலா இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது…….

திமுகவினர் திராவிட மாடல் என்று அனுதினமும் சொல்லிக்கொண்டு, நம் திராவிடத் தலைவர்களையும், திராவிட சிந்தனையாளர்களையும் சிறுமைப்படுத்துவதை நிறுத்திக் கொண்டால், அது நாட்டு மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும். எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற நம் இருபெரும் தலைவர்களின் பொற்கால ஆட்சி திராவிட ஆட்சியா? அல்லது தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்த விளம்பர ஆட்சி திராவிட ஆட்சியா? என்பதை தமிழக மக்களாகிய உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

50 ஆண்டு கால வரலாற்றில் அதிமுக இதுபோன்று தொடர் தோல்விகளை ஒருபோதும் கண்டது இல்லை. அதிமுகவில் தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கின்ற ஒவ்வொரு கட்சித் தொண்டரும் மனம் வேதனையடைந்து கண்ணீர் சிந்துகிறார்கள். இதற்காகவா இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்தோம் என்று மனம் உடைந்து காணப்படுகின்றனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய காலியாக உள்ள 34 பதவிகளுக்கு நடக்கவிருக்கும் தேர்தலில் தனிப்பட்ட ஒரு சிலரின் சுயநலத்தால், நமது வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நநிலைக்கு அதிமுக தொண்டர்கள் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது. ஏதாவது சூழ்ச்சிகளைச் செய்து தாங்கள் உயர்பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்காக, சாதரண கட்சித் தொண்டர்கள் பதவிக்கு வருவதற்கு முட்டுக்கட்டை போடுவது எந்த விதத்தில் நியாயம்? இது கட்சித் தொண்டர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம்.

ஒரு சிலரின் மேல்மட்ட அரசியலுக்கு, அப்பாவித் தொண்டர்களைப் பலியாக்குவதா? உங்களுடைய சுய விருப்பு, வெறுப்புகளு்ககாக இரட்டை இலை சின்னத்தை இதுபோன்று முடக்குவதற்கு யார் முதலில் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது.

அதிமுக தலைமைக்கு என்று ஒரு பண்பு இருக்கிறது. சாதி மதம் பார்க்காமல், ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் பார்க்காமல், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளை அடிபிறழாமல் கடைபிடிக்கின்ற ஒருவர்தான் உண்மையான தலைவராக இருக்கமுடியும்.

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை கண்டிப்பாக வேண்டும். ஆனால், அதே சமயத்தில் தொண்டர்கள் அனைவரையும், அரவணைத்துச் செல்கின்ற தலைமையாக, அனைத்து கொடி பிடிக்கும் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற தலைமையாக இருக்க வேண்டும்.பண பலமும், படை பலமும் ஒரு தலைமையை தீர்மானிக்க முடியாது. மக்கள் பலமும் தொண்டர்கள் பலமும்தான் ஒரு தலைமையைத் தீர்மானிக்கும். சும்மா பத்து, இருபது பேரை தனக்கு ஆதரவாகப் பேசவைத்துவிட்டு, நான் தலைமை என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு, வலுக்கட்டாயமாக நாற்காலியைப் பிடித்துக் கொண்டு இருந்தால் தலைவராக ஆகிவிடமுடியாது. எனவே ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப எனது தலைமையில் இயக்கம் மீண்டும் வலிமை பெரும்

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response