நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் – திமுக அமோக வெற்றி

சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,890 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் கடந்த சனிக்கிழமை (பிப்ரவர் 19-2022 ஆம் தேதி) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இந்தத் தேர்தலில் மொத்தம் 57,746 பேர் போட்டியிட்டனர். சுமார் 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் 60.70 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

மிகவும் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. மிகவும் குறைந்த அளவாக சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 43.59 விழுக்காடு வாக்குகளே பதிவாகின.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (பிப்ரவரி 22,2022) தொடங்கியது. தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர். நகராட்சி, பேரூராட்சிகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே அதிமுக முன்னணியில் இருந்தது. போகப்போக அனைத்து நகராட்சிகளிலும் திமுக கூட்டணி கைப்பற்றியது. பேரூராட்சிகளில் சில இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, தாம்பரம், காஞ்சிபுரம் என மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டு உறுப்பினர் இடங்களுக்கு நடந்த தேர்தலில் 1101 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றியுள்ளன. அதிமுக 163 இடங்களிலும், சுயேச்சை உள்ளிட்ட மற்ற கட்சிகள் 104 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக வேட்பாளர்களே அதிக வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளதால் அனைத்து மாநகராட்சியையும் திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

அதேபோன்று, மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 3,842 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சுமார் 2,659 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றியுள்ளன. அதிமுக கூட்டணி 638 இடங்களிலும், சுயேச்சை உள்ளிட்ட பிற கட்சிகள் 545 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதன்படி, மொத்தமுள்ள 138 நகராட்சிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் 132 இடங்களில் வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதிமுக 3 நகராட்சிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 3 நகராட்சிகளில் சுயேச்சைகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் ஆதரிக்கும் கட்சி நகராட்சியை கைப்பற்றும். அங்கும் திமுகவே கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

அதேபோல, 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 7,604 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 4994 இடங்களில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் 1206 இடங்களில் வெற்றி பெற்று 2 ஆவது இடத்தில் உள்ளனர். சுயேச்சை மற்றும் பிற கட்சி வேட்பாளர்கள் 1403 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பேரூராட்சியில் அதிக சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெறும் நிலையில் உள்ளது. ஆனாலும், பேரூராட்சிகளில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களே 80 விழுக்காடு இடங்களில் வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் அதிக பேரூராட்சிகளையும் திமுகவே கைப்பற்றி உள்ளது.

தமிழகத்தில் நாளை (24 ஆம் தேதி) தேர்தல் நடவடிக்கைகள் முடிவுபெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நிகழ்ச்சி மார்ச் 2 ஆம் தேதி அன்று நடைபெறும். இதைத்தொடர்ந்து, மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல்கள் மூலம் மாநகராட்சிகளுக்கான மேயர் மற்றும் துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

Leave a Response