சென்னை புத்தகக் காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் புத்தகங்களில் ஒன்றாக
வந்திருக்கிறது: ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?
பத்திரிகையாளராகப் பணியாற்றிய நண்பர் இரா.சுப்பிரமணி, பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் கலைஞர் ஆய்வுமைய இயக்குநராக உள்ளார். அவரது நீண்ட நாள் உழைப்பில் விளைந்துள்ள பெரியார் இதழியல் பற்றிய ஆய்வு நூல்.
தமிழ் இதழியல் துறையில் ஆர்வமும் ஆய்வுநோக்கும் கொண்ட அனைவரும் படிக்கவேண்டிய நூலாக அழகிய பதிப்பில் வெளிவந்திருக்கிறது. 800 பக்கத் தொகுப்பில் 1925 – 1949 வரையில் குடியரசு, புரட்சி, பகுத்தறிவு ஏடுகளில் வெளிவந்த பெரியாரின் சொற்பொழிவுகள், தலையங்கங்கள், செய்தி விளக்கங்கள் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.
சொற்பொழிவு மேடைகளும் அச்சடித்த ஏடுகளுமே பெரியாரின் படைக்கலன்கள். அலங்காரமும் புனைவுகளுமற்ற ஆணித்தரமான சொற்கள், கதைகள், துணைக்கதைகள், உரையாடல்கள், கேள்விகள், நக்கல், நையாண்டி எனப் பல மணி நேரம் நீடிக்கும் பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்க மக்கள் அலை அலையாய்த் திரண்டனர்.
பெரியாரின் மேடைத்தமிழும் இதழியல் நடையும் பண்டிதத்தனங்களைத் தவிர்த்த, எளிமையான மக்கள்மொழியில் அமைந்துள்ளன.
மேடையில் மக்களிடம் நேருக்குநேர் ஊடாடும் தன்மை கொண்ட வடிவத்தில் உரையாடினார். இதனால் மக்கள் பெரியார் தம்மிடம் நேரிடையாக உரையாடுவதாகவே உணர்ந்தனர்.
பெரியார் மேடைகளில் தமக்காகப் பேசுவதாகவே கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் உணரும்வண்ணம் அவர் பேச்சு அமைந்திருந்தது. பெரியார் தன்னையும் உள்ளடக்கியே பேசுவார்; கேள்விகேட்பார். தான் ஒரு அறிவாளி, பேச்சாளன் என்ற அதிகார தொனியை அவர் வெளிப்படுத்தியதில்லை.
நாம் சிந்திக்க வேண்டாமா? நாம் அடிமையாகவே இருக்கவேண்டுமா? மானமும் அறிவும் வேண்டாமா? என்னும் கேள்விகளில் பெரியார் தன்னையும், பார்வையாளர்களையும் ஒரேநிலையில் நிறுத்தியே உரையாடினார்.
இதனால் மக்கள் பெரியாரின் குரலைப் பிரித்துப் பார்க்காமல் தம் குரலாய், தமக்கான குரலாய்ப் பார்த்தனர் என்கிறார் நூலின் முன்னுரையில் இரா. சுப்பிரமணி.
வெளியீடு: விடியல் பதிப்பகம், விலை ரூ. 1000
சென்னை புத்தகக் காட்சியில் ரூ. 700க்கு விடியல் அரங்கில் நூல் கிடைக்கும்.
– சுந்தரபுத்தன்