பத்திரிகையாளர் திடீர் மரணம் தவித்து நின்ற குடும்பம் – மின்னல் வேகத்தில் உதவிய முதல்வர்

மூத்த புகைப்படக் கலைஞர், பத்திரிகையாளர் யுஎன்ஐ செய்தி நிறுவனத்தின் சென்னை கிளை தலைமை நிர்வாகி தி.குமார் திடீரென தன்னை மாய்த்துக் கொண்டார்.

தவித்து நின்ற அவரது குடும்பத்துக்கு மின்னல் வேகத்தில் நிவாரண உதவி செய்தார் தமிழக முதல்வர்.

அதற்காக தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு….

நமது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மூத்த உறுப்பினர், மூத்த புகைப்படக் கலைஞர், பத்திரிகையாளர் யு.என்.ஐ செய்தி நிறுவனத்தின் சென்னை கிளையின் தலைமை நிர்வாகி *திரு.தி.குமார் (வயது 56 ) நேற்றைய தினம் (13-02-2022) ஞாயிற்றுக்கிழமை தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார் என்ற தகவல் நம் நெஞ்சில் பேரிடியாக விழுந்தது.

உழைப்பால் படிப்படியாக உயர்ந்து யு.என்.ஐ செய்தி நிறுவனத்தில் சென்னை கிளையின் தலைமை நிர்வாகி பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டவர். சக பத்திரிகை தோழர்களிடம் அன்போடு பழகும் தன்மை கொண்ட திரு.குமார் அவர்களின் மறைவு ஈடு செய்ய இயலாத ஒன்று.

நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் திரு.குமார் அவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர் . மகளின் திருமணத்திற்கான ஏற்பாடுகளில் இருந்த திரு.குமார் அவர்களின் இந்த அகால மரணம் பெரும் துயரத்தை தந்துள்ள நிலையில் , மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், திரு.குமார் அவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கி உதவிட வேண்டுகிறோம், என்ற வேண்டுகோளை வைத்திருந்தோம்.

உடல் அடக்கம் முடிந்து சில நிமிடங்களுக்குள் , மாண்புமிகு தமிழக முதல்வர் கருணையோடு, பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து சிறப்பு நேர்வாக ரூபாய் மூன்று லட்சம் நிதி உதவி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மறைந்த பத்திரிகையாளர் திரு.குமார் அவர்கள் குடும்பத்தினருக்கு மின்னல் வேகத்தில் உதவிய மாண்புமிகு முதலமைச்சருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

பாரதிதமிழன்,
இணைச் செயலாளர்,
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
14-02-2022

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response