கேகேஎஸ்எஸ்ஆரிடம் சரணடைந்த கேடிஆர் – கைதில் இருந்து தப்புகிறார்?

முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் அவர் முன்பிணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் விருதுநகரில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பேசி முடித்தவுடன் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார், ரமணா மற்றும் ஓட்டுநர் ராஜ்குமார் ஆகியோரை திருத்தங்கல் காவல்துறையினர் அவர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரணைக்காக அழைத்து வந்தனர். நள்ளிரவு 1 மணியைக் கடந்தும் 3 பேரையும் காவல்துறையினர் விடுவிக்காததால் இந்த தகவல் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரவியது.

இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், திருத்தங்கல் பொன்சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன், விஸ்வநத்தம் ஆரோக்கியம், வெங்கடேஷ், சுடர்வள்ளி சசிக்குமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திருத்தங்கல் காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.

அவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் அமைச்சரின் உறவினர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரினர். அதன் பின்னர் அதிகாலை 3 மணிக்கு திருத்தங்கல் காவல் நிலையத்தில் 3 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விருதுநகர் அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் இராஜேந்திர பாலாஜியின் இருப்பிடம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனாலும் அவர்களிடமிருந்து உறுதியான தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் நேற்று விசாரணையை முடித்து அவர்கள் 3 பேரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையில் அவர்கள் 3 பேரையும் விசாரணைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது அ.தி.மு.க.வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் இராஜேந்திரபாலாஜியுடன் நெருங்கிய தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகளிடமும் அவரது இருப்பிடம் குறித்து விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும் காவல்துறையினருக்கு எவ்வித உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.

இதுபற்றி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மனோகர் கூறியதாவது….

முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கில் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதால் அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காகக் கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் வெளி மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கே.டி.இராஜேந்திரபாலாஜியுடன் சேர்ந்து முன்பிணை மனு தாக்கல் செய்திருந்த அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன் மற்றும் வக்கீல் முத்து பாண்டி ஆகியோரும் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

இவை ஒருபுறமிருக்க, விருதுநகர் மாவட்டத்தின் தற்போதைய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் முன்னாள் அமைச்சர் இராஜேந்திரபாலாஜி சரணடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. தொடக்கத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆருடன் பணியாற்றியவர் என்கிற அடிப்படையில் அவரிடம் சரணடைந்து இந்தச் சிக்கலில் இருந்து காப்பாற்றக் கோரிக்கை வைத்ததாகவும் அதை அவர் ஏற்றுக்கொண்டார் என்றும் பேச்சு அடிபடுகிறது.

இதனால், உச்சநீதிமன்றத்தில் பிணைமனு தாக்கல் செய்து அதில் சாதகமான உத்தரவு பெறும்வரை இராஜேந்திரபாலாஜி கைது நடவடிக்கை இருக்காது, தனிப்படை அமைத்தல் தேடுதல் வேட்டை என்பதெல்லாம் கண்துடைப்பு என்கிற பேச்சு மேல்மட்ட இரகசியமாக உலாவந்து கொண்டிருக்கிறது.

இது உண்மையா? பொய்யா? என்பது போகப்போகத் தெரிந்துவிடும்.

Leave a Response