4 மாதங்களுக்குப் பிறகு நடிகர் விவேக் மரணத்தில் எழுந்துள்ள சர்ச்சை

நடிகர் விவேக் சமூக அக்கறையுள்ள கலைஞர். மக்கள் மீதான அக்கறை, சுற்றுச் சூழல், மரம் நடுதல் ஆகியனவற்றில் அவரது பங்களிப்பு வரவேற்கத்தக்கது. அவரது கடைசி நிகழ்ச்சி கொரோனா பரவலைத்தடுக்க மக்கள் தடுப்பூசி போடவேண்டும் என்பதற்காக, தானே தடுப்பூசி போட்டு வேண்டுகோள் விட்டார்.

அவரது கடைசி நிகழ்ச்சியாக அது அமைந்தது, அதன் பின்னர் ஏப்ரல் 16 ஆம் தேதி காலை வீட்டிலிருந்த அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். உடனடியாக அவருக்கு உயரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு எக்மோ கருவி மூலம் இதயத் துடிப்பு இயங்க வைக்கப்பட்டது.ஏப்ரல் 17 காலையில் மீண்டும் ஏற்பட்ட மாரடைப்பு அவர் உயிரைப் பறித்தது.

அவரது மறைவு செய்தி கேட்டு திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

அவர் மறைந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு இப்போது அவர் மரணம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முதல் நாள், விவேக் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டார். அதனால், தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் விவேக் இறந்ததாகச் சிலர் தெரிவித்தனர். ஆனால், மருத்துவத் துறையினர் விவேக்கின் மரணத்திற்கும், தடுப்பூசி போட்டதற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ‘நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் இறந்தார். அவருக்கு முறையான பரிசோதனை நடத்தி தடுப்பூசி போடவில்லை. எனவே, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இவரது புகாரை ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response