யார் இந்த ஸ்டேன் சுவாமி? – வெகுண்டெழுந்த சோனியாகாந்தி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பத்து தலைவர்கள்

பழங்குடி இன மக்களின் உரிமைப் போராளியும் பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு காங்கிரசு, திமுக உள்ளிட்ட பத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.

காங்கிரசு தலைவர் சோனியாகாந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரசு தலைவர் சரத்பவார், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவகவுடா, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், இடதுசாரிகள் தலைவர் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் இக்கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளனர்.

அக்கடிதத்தில்,

பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் மறைவை ஒட்டி, தேசத்தின் பிரதான எதிர்க்கட்சியினரான நாங்கள் அனைவரும் இணைந்து மிகுந்த மனவேதனையுடன், ஆழ்ந்த வருத்தத்துடன் அதேவேளையில் தார்மீகக் கோபத்துடனும் இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறோம்.

பாதிரியார் ஸ்டேன் சுவாமி மீது போலியான வழக்குகளைத் தொடர்ந்து அவரைத் தொடர்ந்து சிறையில் அடைத்து மனிதத்தன்மையற்ற நடவடிக்கைகளால் அவரை வருத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவராகிய தங்களை வேண்டுகிறோம்.

ஸ்டேன் சுவாமியின் மரணத்திற்கு அவர்கள்தான் பொறுப்பு. ஸ்டேன் சுவாமியின் மரணம், பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட பலரும் அரசியல் உள்நோக்கத்துடனேயே கைதானவர்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. உபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் அவர்கள் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு வேண்டுகிறோம்.

இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஸ்டேன் சுவாமி?

ஸ்டேன் சுவாமி திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பழங்குடியினரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடி வந்தார். இந்நிலையில்தான் இவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.

பீமா கோரேகான் வன்முறை வழக்கு:

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பீமா கோரேகன் பகுதியில் 2017 ஆம் ஆண்டு இருசமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை நிகழ்ந்த்து.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகள் ஸ்டேன் சுவாமியைக் கைது செய்தனர்.

ஸ்டேன் சுவாமிக்கு தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தததாகவும் இந்த அமைப்புடன் சேர்ந்து இவர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார் என்றும் என்ஐஏ அவர் மீது குற்றஞ்சாட்டியது. தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏற்கெனவே பார்க்கின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிறையில் சரியான சிகிச்சை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று அவரது தரப்பில் தொடர்ந்து குற்றஞ்சாட்டுப்பட்டு வந்தது. கடைசியாக அவர் தாக்கல் செய்த இடைக்கால பிணை மனுவில் கூட “என்னை மருத்துவமனையில் சேர்ப்பதால் எந்தப் பலனும் இருக்காது. என்னால் சரியாகச் சாப்பிட முடியவில்லை. நான் இந்தச் சிறையிலேயே இறந்துவிடுகிறேன் என்னை மருத்துவமனையில் சேர்க்காதீர்கள். முடிந்தால் எனக்கு இடைக்கால பிணை வழங்குங்கள்” என்று நெகிழ்ச்சி பொங்கக் கூறியிருந்தார். இதனையடுத்து, ஸ்டேன் சுவாமிக்கு உரிய மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையமும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த மே 29 ஆம் தேதியன்று மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியானது. நேற்று முன்தினம் அவருக்கு வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவி சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கினர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பிற்பகலில் அவர் உயிரிழந்தார்

அவரது இடைக்கால பிணை மனு மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அவரது மறைவுச் செய்தி மும்பை உயர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவுச் செய்திக்கு நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.

அவரது மறைவுக்குப் பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு காங்கிரசு, திமுக உள்ளிட்ட பத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.

இது மோடி அரசுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response