அதிமுகவில் சசிகலாவா? ஓபிஎஸ் உடன் மோதலா? – எடப்பாடி பதில்

சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஜெயக்குமார் உள்ளிட்ட 9 மாவட்டச் செயலாளர்களுடன், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது…..

அரசியலைவிட்டே விலகுவதாக அறிவித்து விட்ட சசிகலாவின் பெயரில், வேண்டுமென்றே குழப்பத்தை விளைவிப்பதற்காக ஆடியோ வெளியிடப்படுகிறது.

இன்று அதிமுக பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. இதில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது

சென்னையில் புது வீட்டுக்கு இடம் பெயர்ந்ததால் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. அனைத்து நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டம் இன்று நடைபெறவில்லை

சில விவகாரங்களில் எதிர்க்கட்சித் தலைவராக நான் பதில் கூற வேண்டியிருக்கும். சில விவகாரங்களில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அவர் சில பதில்களை தெரிவிப்பார். இது அவ்வளவு தானே ஒழிய, எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

அம்மாவின் ஆட்சிக்காலத்திலேயே அமைச்சர்கள், நிர்வாகிகள், அவர்கள் தொடர்புடைய விஷயங்களுக்கு அறிக்கையின் மூலம் பதிலளித்த சம்பவங்கள் உண்டு. அப்போதெல்லாம் கேள்வி எழவில்லை. இப்போது வேண்டுமென்றே இது போன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி இப்படிக் கூறினாலும் இன்று நடந்தது அவருடைய ஆதரவாளர்கள் கூட்டம்தான் என்றும் அதனால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் கலந்துகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

Leave a Response