ஸ்டெர்லைட் ஆலை திறப்பு – பச்சை தமிழகம் சுப.உதயகுமாரன் அறிக்கை

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சதிவலைக்குள் தமிழர்களைத் தள்ளாதீர்கள் என்று பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமாரன் கூறியுள்ளார்.

அவர் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

பிராண வாயு உற்பத்தி மேற்கொள்ள 4 மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், திமுக உள்ளிட்ட பல கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நயவஞ்சகச் செயல். தூத்துக்குடி மாவட்ட மக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களையே காட்டிக்கொடுக்கும் செயல் இது.

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்து போராடிய நேரத்தில், ஒரு செயற்கை மின்வெட்டை உருவாக்கி, தமிழ் நாட்டு மக்களை சொல்லொணாத் துன்பத்திற்குள்ளாக்கி, அவர்களின் கருத்துக்களை, நிலைப்பாட்டை போராட்டத்துக்கு எதிராக நயவஞ்சகமாக மாற்றியமைத்தது போலவே, இப்போதும் கபடநாடகம் ஆடுகிறார்கள்.

நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்பது உண்மைதான். மக்கள் உயிரிழக்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் அனில் அகர்வாலின் மக்கள் விரோத ஸ்டெர்லைட் நச்சாலை ஒன்றுதான் இப்போது நமக்கிருக்கும் ஒரே வழி என்பது உண்மையல்ல.

ஸ்டெர்லைட் வளாகத்திலுள்ள ஆக்சிஜன் ஆலையைச் செப்பனிடுவதற்கே பல வாரங்கள் ஆகும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அரசு நினைத்தால் அத்தனை நாட்களை வீணாக்காமல், தேவைப்படும் ஆக்சிஜனை உடனடியாகத் தயாரிக்க பற்பல வழிகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தீவிரமாகப் பரிசீலிக்காமல், வேதாந்தாவுக்குத் துணைபோவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

ஆக்சிஜன் மட்டுமே, நான்கு மாதங்கள் மட்டுமே என்பவையெல்லாம் மக்களை ஏமாற்றும், திசைதிருப்பும் அரசியல் சித்து வேலைகள். அனில் அகர்வாலின் பணமும், அந்த முதலாளியின் பணத்திற்காக மண்டியிட்டுக் கிடக்கும் சக்திமிக்க தில்லி நண்பர்களும், அவர்களுக்கு அனுசரணையாக அரசியல் மற்றும் அரச நிர்வாகத் தளங்களில் இயங்கும் கைப்பாவைகளும் சேர்ந்து ஓர் உலகமகா நாடகம் நடத்துகிறார்கள்.

வெகுமக்கள் போராட்டம் மீண்டுமொருமுறை அதிகாரச் சதியால் முறியடிக்கப்படுகிறது. மூச்சுக்காற்றுத் தருகிறோம் என்று வேடமிடும் மூலக்காற்றை நச்சாக்கியக் கயவர்களோடு எக்காரணம் கொண்டும் கைகோர்க்கக் கூடாது, முடியாது.

மக்கள் உயிர்களை அழித்தவனோடு கைகோர்க்காமல், நமது படைப்புத்திறனையும், அன்பையும், கரிசனத்தையும், நவீன மக்கள் சார்பு அறிவியலையும் பயன்படுத்தி மக்கள நலன்களைப் பாதுகாப்போம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Response