அமெரிக்க அதிபர் ஜோபைடனும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் – வியப்பூட்டும் ஒப்பீடு

அண்மையில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகியிருக்கும் ஜோபைடனுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் உள்ள வியப்பூட்டும் ஒற்றுமைகளைப் பற்றி அமெரிக்காவில் வாழும் தமிழர் முனிரத்தினம் சுந்தரமூர்த்தியின்
ஒப்பீட்டு அரசியல் கட்டுரை…

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மீது வைக்கப்படும் மிகப்பெரிய விமர்சனம் அவர் பேசத் தடுமாறுகிறார் என்பது. இதே போன்ற விமர்சனம் தான் இன்றைய அமெரிக்க அதிபர் ஜோசப் பைடெனின் மீதும் வைக்கப்பட்டு வந்தது. ஸ்டாலினுக்கு கலைஞரைப் போன்று மேடைப் பேச்சாற்றல் இல்லை. அதே போன்று பைடெனுக்கும் அவருக்கு முன்பு ஜனநாயகக் கட்சி அதிபர்களாக இருந்த வில்லியம் கிளிண்டனைப் போன்றோ, பராக் ஒபாமோ போன்றோ பேச்சாற்றல் இல்லை. கலைஞரும் கிளிண்டன், ஒபாமாவைப் போன்று இளம் வயதிலேயே அரசியலில் கொடிகட்டிப் பறந்ததற்கு பேச்சாற்றல் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. ஆகவே பேச்சாற்றல் மட்டுமே அரசியலில் வெற்றி பெற போதுமானது என்று நினைப்பது சரியல்ல.

பைடென் இயற்கையிலேயே கொஞ்சம் திக்கிப் பேசுபவர். அதுவுமில்லாமல் பேசும்போது சிலநேரம் வார்த்தைகள் வராமல் தடுமாறுவதற்கும், சிலநேரம் தேவையில்லாத வார்த்தைகளைச் சொல்லி மாட்டிக்கொள்வதற்கும் பெயரெடுத்தவர். இந்தப் பிரச்சினை ஸ்டாலினையும் துரத்துகிறது. அதனாலேயே அவர் எழுதிவைத்துக்கொண்டு பேசுகிறார். அப்படி பேசும்போது முதலிரண்டு வாக்கியங்களை எழுத்தில் இருப்பது போன்று படித்துவிட்டு பின் தன் இயல்பு நிலைக்கு மாறி ”வந்துச்சி, போச்சி” என பேச்சு வழக்கிற்கு வந்துவிடுகிறார். அப்படிப் பேசும்போது எப்போதாவது ஒரு பழமொழியை அல்லது எண்களை தவறாகச் சொல்லிவிடுவதும் உண்டு. அது ஒரு பெரிய குறையாக ஊதிப் பெருக்கப்படுகிறது.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், அகண்ட பாரத அதிபர் நரேந்திர மோடியும், தமிழ்த் தேசிய அதிபர் செந்தமிழன் சீமானும் எழுதிவைத்துப் படிக்காமல் சரளமாக பேசக்கூடியவர்கள். டிரம்பு எழுதிக்கொடுத்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் அந்த நேரத்திற்கு வாயில் என்ன வருகிறதோ அதைப் பேசித் தன் ஆதரவாளர்களுக்கு கேளிக்கை வழங்கக்கூடியவர். நல்ல வேளையாக மோடி இந்தியில் பேசுவதால் நான் அவருடைய வாய்ச்சவடால்களை கேட்க முடிதில்லை. அவற்றை வைத்து வரும் மீம்களைப் பார்த்து தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சீமான் டிரம்புக்கே சவால் விடுக்கக்கூடிய அளவுக்கு சரளமாக அள்ளிவிடக்கூடியவர். இந்த மூவரும் பேசுவதில் சவடால்கள் மிகுதியாகவும், சரக்கு மிகமிகக் குறைவாகவும் இருக்கும். ஆனால் இவை அவர்களுடைய முரட்டு பக்தர்களிடம் எளிதாக செல்லுபடியாகிறது.

தனித்தனியாக பைடென் பேசுவதையும், டிரம்பு பேசுவதையும் பார்க்கும்போது இருவருடைய உரைகளுக்கும் மடுவிற்கும், மலைக்கும் உள்ள வித்தியாசம் தெரியும். பைடென் பேசுவதைக் கேட்டால் தூக்கம் வந்துவிடும். டிரம்பு பேசுவதைக் கேட்டால் தூங்கிக்கொண்டிருந்தாலும் எழுந்து உட்கார்ந்து சிரிக்கத் தோன்றும். தூக்கத்தையும், சிரிப்பையும் மட்டும் வைத்தா ஒருவர் நல்ல ஆட்சியாளராக இருக்க முடியுமா என்று தீர்மானிக்க முடியும்?

பைடெனுக்கும், ஸ்டாலினுக்கும் பத்து வயதிற்கு மேல் வித்தியாசம் உண்டு. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருப்பவர்கள். தாங்கள் அடைந்த, அடைய விரும்பும் பதவிகளுக்கு நீண்ட காலம் காத்திருந்த/ப்பவர்கள்.

பைடென் 36 ஆண்டுகள் செனட்டராக இருந்தவர். எட்டாண்டுகள் துணை அதிபராக இருந்தவர். 1988 இல் ஒரு முறையும், 2008 இல் இன்னொரு முறையும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்வுக்கு முயன்றுத் தோற்றவர். அவருடைய கடைசி வாய்ப்பாக கருத்தப்பட்ட 2020 வேட்பாளர் தேர்வுகளிலும் முதலில் தோல்களைச் சந்தித்து பின் முன்னேறி வந்து அதிபர் தேர்தலில் டிரம்பைத் தோற்கடித்தார். தோல்வியைச் சந்தித்த டிரம்பு பல தகிடுதத்தங்களைச் செய்து பதவியில் தொடரப் பார்த்தார். ஆனால் தேர்தலில் வென்ற நாளிலிருந்து பதவி ஏற்ற நாள் வரை பைடெனின் அரசியல் அனுபவமும், அணுகுமுறையும் தெற்றெனப் புலப்பட்டது. அவரது முழுக்கவனமும் தன்னுடைய அமைச்சரவைக்கு சரியான ஆட்களை தெரிவு செய்வதிலும், தன்னுடைய ஆட்சியில் செய்ய நினைப்பவற்றுக்கு கொள்கைகளை வகுப்பதிலும் தான் அவருடைய முழுக்கவனமும் இருந்தது. பதவி ஏற்ற நாளிலிருந்து டிரம்பு ஏற்படுத்திச் சென்ற குளறுபடிகளை சரிசெய்வதே அவருடைய வேலையாக இருந்தது. பதவி ஏற்ற இரண்டு மாதங்களுக்குள் நாடளுமன்றத்தில் தன்னுடைய கட்சியின் பெரும்பான்மையைப் பயன்படுத்திக் கிட்டத்தட்ட இரண்டு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள கோவிட் நிவாரணநிதிச் சட்டத்தை நிறைவேற்றினார்.

தேர்தலுக்கு முன்பு டிரம்புடன் நடத்திய விவாதத்திலும். பதவியேற்ற தொலைக்காட்சி நேர்காணல்களிலும், தன்னுடைய ஆட்சியின் முதல் சாதனையையும், பெருந்தொற்றின் முதலாண்டு நிறைவையும் ஒட்டி ஆற்றிய உரையிலும் பைடெனின் பேச்சுத் தடுமாற்றம் தெரியவில்லை. இதை வைத்து நியூ யார்க் டைம்சில் ஒரு பத்தியாளர் “பைடென் காணாமல் போய்விட்டார்” என்று எழுதினார். அந்தப் பத்தியாளரும், வேறு பல அரசியல் நோக்கர்களும் பைடென் பெருமாற்றத்தை நிகழ்த்தும் அதிபராக (Transformational President) இருப்பார் என்று கணிக்கின்றனர். எண்பதுகளில் ரொனால்ட் ரீகன் எடுத்துச்சென்ற திசையில் இதுவரை சென்றுக்கொண்டிருந்த அமெரிக்கா முடிவடைந்தது. இனி பைடென் செல்லப் போகும் புதிய திசையில் அமெரிக்கா அடுத்த சில பத்தாண்டுகள் பயணம் செய்யும் என்று கணிக்கப்படுகிறது.

ஸ்டாலின் கட்சியில் இளைஞரணிச் செயலாளராக, செயல் தலைவராக இருந்து தற்போது தலைவராக இருப்பவர். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக, சென்னைப் பெருநகர ஆட்சியாளராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்வராக இருந்து இப்போது முதல்வராகும் முயற்சி சாத்தியமாகக் கூடிய நிலையில் இருக்கிறார். இந்தியாவில் இருக்கும் விநோதமான வாரிசு அரசியல் கலாச்சாரத்திலும் அவருக்குத் தடையற்ற பாதை உருவாகவில்லை. அவருடைய அண்ணன் அழகிரியிடம் மல்லுகட்டி தன்னை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார். கட்சியையும், கூட்டணியையும் வழிநடத்தி 2019 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி ஈட்டி தன்னுடைய தலைமையை நிலைநிறுத்தியிருக்கிறார். இவ்வளவு அனுபவமும், அவருடைய நாகரிகமான அணுகுமுறைகளும் அவர் ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்படும்போது பெரிய அளவில் கைகொடுக்கும். தற்போது பெரிய அளவில் பிரச்சினைகள் வராமல் கூட்டணிக்கட்சிகளின் தொகுதிப் பங்கீடுகளும், முழுக்கவனத்தையும் குவித்து ஓய்வின்றி நடத்தி வரும் தேர்தல் பரப்புரைகளும் மிகப்பெரிய வெற்றியை ஈட்டித் தரும் எனத் தோன்றுகிறது. பைடெனின் பதவியேற்பைத் தடுத்து நிறுத்த டிரம்பு மேற்கொண்ட தகிடுதத்தங்களைப் போன்று ஆளும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் பலவிதமான சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபடக்கூடும். ஆயினும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையிருக்கிறது. வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் பட்சத்தில் முதல் சிலமாதங்கள் கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற குளறுபடிகளை சரிசெய்யவே சரியாக இருக்கும். ஆட்சியின் செயல்பாடுகளே ஸ்டாலினின் தலைமையை நிர்ணயிக்கும். பேச்சுகளில் ஏற்படும் சிற்சில தடுமாற்றங்கள் அல்ல. நான் அவருடைய தேர்தல் பிரச்சாரப் பேச்சுகளைக் கவனித்தவரையில் அத்தகையத் தடுமாற்றங்கள் பெருமளவு காணாமல் போயிருக்கின்றன. நீண்டகாலமாக கோலோச்சிய இரு கட்சிகளின் பெருந்தலைவர்கள் மறைந்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதல்வராக பதவியேற்க வாய்ப்பிருக்கும் ஸ்டாலினும் அடுத்த சில பத்தாண்டுகளில் பெருமாற்றத்தை நிகழ்த்தக் கூடிய முதல்வராக (Transformational Chief Minister) இருப்பார் என்பது என் கணிப்பு.

Leave a Response