புதுவையில் தேய்ந்த அதிமுக – கட்சியினர் வேதனை

புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரசு, அ.தி.மு.க. பா.ச.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதில் என்.ஆர்.காங்கிரசுக் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.மீதம் உள்ள 14 தொகுதிகளை பா.ச.க., அ.தி.மு.க. பிரித்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான பேச்சுவார்த்தையின்போது அ.தி.மு.க.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியானது. இதனால் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். எனவே, புதுவையில் கூடுதல்
தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரும், புதுவை மாநில பொறுப்பாளருமான எம்.சி.சம்பத், பா.ச.க. மாநிலப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது அ.தி.மு.க.வுக்கு 7 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் எந்த முடிவும் ஏற்படவில்லை.

இந்தநிலையில் தொகுதிப் பங்கீடு முடிவதற்கு முன்பாகவே நெல்லித்தோப்பு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட ஓம்சக்தி சேகர் வேட்புமனு தாக்கல் செய்தார்.பா.ச.க. சார்பிலும் நெல்லித்தோப்பு தொகுதியில் ஜான்குமாரின் மகன் வேட்புனு தாக்கல் செய்திருந்தார். இதனால் இந்தத் தொகுதி யாருக்கு? என்பதில் சிக்கல் எழுந்தது.இதனால் தாமதம் ஏற்பட்டு வந்தநிலையில் ஒருவழியாக உடன்பாடு ஏற்பட்டது. இதில் பா.ச.க.வுக்கு 9, அ.தி.மு.க.வுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி பா.ச.க. சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியலை அந்தக் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

1.லாஸ்பேட்டை-சாமிநாதன்,
2.மண்ணாடிப்பட்டு-நமச்சிவாயம்,
3.ஊசுடு-சரவணகுமார்,
4.காமராஜ் நகர்-ஜான்குமார்,
5.காலாப்பட்டு-கல்யாணசுந்தரம்,
6.நெல்லித்தோப்பு-வில்லியம் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார்,
7.மணவெளி -செல்வம்,
8.திருநள்ளாறு-ராஜசேகரன்,
9.நிரவி திருபட்டினம்-மனோகரன்.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் புதுவை மாநில அ.தி.மு.க. பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

1.உப்பளம்-அன்பழகன்,
2.உருளையன்பேட்டை- ஓம்சக்தி சேகர்,
3.முதலியார்பேட்டை-பாஸ்கர்,
4.முத்தியால்பேட்டை-வையாபுரி மணிகண்டன்,
5.காரைக்கால் தெற்கு-அசனா.

அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே இருந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், கூடுதலாக மேற்கு மாநிலச் செயலாளர் ஓம்சக்தி சேகருக்கும் இந்தத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பெரியகட்சி அதிமுக.தனித்துப் போட்டியிட்டு 4 இடங்களை வென்ற கட்சி அதிமுக. அதேசமயம் அங்கு பாசகவுக்கு சட்டமன்ற உறுப்பினர்களே கிடையாது. ஆளுநரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி 3 நியமன உறுப்பினர்களைப் பெற்ற அக்கட்சி இப்போது 9 இடங்களில் போட்டியிடுகிறது.அதிமுகவுக்கு 5 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாசகவுடன் கூட்டு சேர்ந்ததால் அதிமுக தேய்ந்துவிட்டது என்று அக்கட்சியினர் வேதனை தெரிவிக்கின்றனர்,

Leave a Response